சென்னை: முகமது ஹாஷிம் சாஹிப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: கே.எச். குழும தலைவரும் தென்னிந்திய தோல் பதனிடுவோர் மற்றும் முகவர்கள் பேரவையின் புரவலருமான ஜனாப் ஹாஜி மலாக் முகமது ஹாஷிம் சாஹிப் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். ராணிப்பேட்டை பகுதியில் தோல் பதனிடும் தொழில்துறையின் பிதாமகராக விளங்கி, பல பேருக்கு வேலை வாய்ப்பளித்து, இஸ்லாமிய மக்களிடையே பெரும் மரியாதை பெற்றுத் திகழ்ந்தவர் முகமது ஹாஷிம் சாகிப். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மேல்விஷாரம் பகுதி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மமக தலைவர் ஜவாஹிருல்லா: தமிழ்நாடு தோல் பொருட்கள் உற்பத்தியில் முதலிடம் பெற்று தொழில் துறையில் மிகப் பெரும் முன்னேற்றமடைவதற்கு காரணமாக விளங்கியவர் மலக் முகமது ஹாசிம். அவரது பிரிவு பேரிழப்பாகும்.
இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர்: தோல் தொழில் சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லா தலைவர், கல்வி உலகின் மிகச்சிறந்த கல்வியாளர், எல்லா மக்களுக்குமான மனிதநேயமிக்க தலைவராக திகழ்ந்தவர் ஹாசிம் சாகிப். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.