புதுடெல்லி: பத்திரிகையாளர்களை சந்திக்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “உலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள் அவ்வப்போது சுதந்திரமாக பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துகின்றனர். ஆனால் 11 ஆண்டுகளாக எங்களுக்கு அப்படி எதுவுமில்லை. பிரதமர் மோடி, கடந்தாண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது முன்பே எழுதி, இயக்கப்பட்ட ஒரு ஊடக உரையாடலைத்தான் வாசித்தார். அப்போது தன்னை உயிரியல் பிறப்பல்லாதவர் என்று சொல்லி பிரபலமாக முயற்சித்தார்.
ஆனால், பத்திரிகையாளர்களை சந்திக்க ஒருபோதும் துணிச்சல் இல்லை. இது அவரது முன்னோடிகளிடையே இல்லாத முற்றிலும் மாறுபட்ட ஒன்று. 2014ம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்றது முதல் மோடி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை. ஜனநாயக அடித்தளங்கள் நிறுவப்பட பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுதான் சிறந்த வழி” என காட்டமாக விமர்சித்துள்ளார்.