கடலூர்: பிரதமர் நரேந்திர மோடி விமானி இல்லாமல் கூட போவார்; ஆனால்அதானி இல்லாமல் போக மாட்டார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். கழுதூரில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கொண்டார். இதில் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வெ. கணேசன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் தமிழக வேளாண்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், தி.மு.க. இளைஞரணி மாநகர, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் பரிசளிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம், வெற்றி பெறுவோம், வெற்றி கிடைத்தால் அதனை முழுவதும் தாங்களே ஏற்றுக்கொள்ளுங்கள் என எடப்பாடி பழனிசாமியிடம் சவால் விடுத்தேன். ஆனால் இதுவரை பதில் இல்லை. நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து போராட்டட்தில் ஈடுபட்டுவருகிறேன். தமிழ்நாடு எனும் வீட்டில் விஷப்பாம்பு எனும் பாஜக, அதிமுக மூலம் நுழைய பார்க்கிறது. அதனை விரட்டி அடிக்க வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்; பிரதமர் நரேந்திர மோடி விமானி இல்லாமல் கூட போவார்; ஆனால் அதானி இல்லாமல் போக மாட்டார். பா.ஜ.கவின் ஊழலை நாம் வெளிக்கொண்டு வருவதால் நம்மை பயமுறுத்துவதற்காக ED,CBI-ஐ ஏவுகின்றனர். நீங்கள் யாரை அனுப்பினாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். ED, மோடியைகண்டு அஞ்சும் அடிமை அ.தி.மு.கதான். தி.மு.க அல்ல. இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காப்பதற்கான போரில், திமுகவின் வாளும் – கேடயமுமாக திகழும் நம் இளைஞர் அணி மாநாட்டை வெல்லச் செய்வோம். 2024 மக்களவை தேர்தலுக்கான திசைவழியை தீர்மானிக்க, டிசம்பர் 17 அன்று சேலத்தில் சங்கமிப்போம் என்றும் கூறினார்.