சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றைய பாஜ அரசு, ஆர்.எஸ்.எஸ். தலைமை நிலையத்திலிருந்து விதிக்கப்படுகிற கட்டளைகளை நிறைவேற்றுவதோடு, அதானி நிறுவனம் பொருளாதார ஆதாயம் அடைகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் முக்கிய அமைச்சர்கள் நியமனங்கள் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ். தலைமையால் பரிசோதித்து, பரிந்துரை செய்யப்பட்டவையாகும். இதனால் ஆர்.எஸ்.எஸ். விடுக்கிற கட்டளைகளை நிறைவேற்றுகிற அரசாகத் தான் பாஜ செயல்படுகிறது.
மோடி அரசின் தீவிர ஆதரவு காரணமாக 2014ல் அதானியின் நிகர சொத்து மதிப்பு 2.9 பில்லியன் டாலராக இருந்தது, 2022ல் 120 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. அதாவது 4,000 சதவிகிதம் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது. இது பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட அசுர வளர்ச்சியாகும். எனவே, பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். கட்டளையின் பேரில் இந்துத்வா அரசியல், அதானிக்கு ஆதரவான நடவடிக்கைகளின் மூலமாக பெரும் சொத்து குவிப்பு, அதன்மூலம் தேர்தல் பத்திர நன்கொடை வசூல் என பாஜ அரசு செயல்படுகிறது. இதன் மூலம் 146 கோடி மக்களின் வாழ்க்கை கடுமையாக சீரழிக்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சியை பின்னாலே இருந்து இயக்குகிற இந்த நச்சு சக்திகளை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு அதை முறியடிக்க வேண்டும்.