கோவை: பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்- மனதின் குரல்’ எனும் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அதன்படி நேற்று (30ம் தேதி) ஒலிபரப்பு செய்யப்பட்ட 103வது ‘மன் கி பாத்-மனதின் குரல்’ நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் சார்ந்து பிரதமர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஓவியர் ராகவன் சுரேஷ் செய்து வரும் அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த ஓவிய ஆவண முயற்சி குறித்து குறிப்பிட்டு பாராட்டினார்.
இதுகுறித்து ஓவியர் சுரேஷ் கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த என்னுடைய ஓவிய முயற்சி குறித்து பிரதமர், மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருப்பது, எனக்கும் எனது முயற்சிக்குமான மிகப்பெரிய அங்கீகாரம். எனது ஓய்வு நேரத்தில் அழியும் தருவாயில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களை தத்ரூபமான ஓவியமாக வரைந்து வருகிறேன். கடந்த 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை 350 க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளேன். அடுத்த தலைமுறையினருக்கு அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஓவியங்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் காட்சிப்படுத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.