Wednesday, April 17, 2024
Home » எனக்கு வந்த கூட்டத்தைவிட மோடிக்கு கூட்டம் கம்மிதான்… உண்மையை போட்டு உடைத்த பாரிவேந்தர்

எனக்கு வந்த கூட்டத்தைவிட மோடிக்கு கூட்டம் கம்மிதான்… உண்மையை போட்டு உடைத்த பாரிவேந்தர்

by Karthik Yash

பெரம்பலூர் துறைமங்கலம் தனியார் கூட்ட அரங்கில் பார்க்கவ குல முன்னேற்ற சங்க ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட ஐஜேகே நிறுவன தலைவரும், பெரம்பலூர் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் (எ) பச்சமுத்து பேசியதாவது: தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்தான். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் அவர் கூடவே நானும் இருப்பேன். அங்கும் கூட்டம் வந்தது. சொல்லப்போனால் நாம் நடத்திய மாநாட்டை விட குறைவான கூட்டம் தான் மோடிக்கே வந்தது. பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட பலரிடம் கெஞ்சி பார்த்தேன். கட்சியில் யாரும் சம்மதிக்கவில்லை. இந்த சமுதாயத்தில் எம்பி தேர்தலுக்கு போட்டியிட ஆளே இல்லையா என யாரும் கூறிவிடக்கூடாது என்பதற்காகவே போட்டியிடுகிறேன். இந்த முறை போட்டியிடாவிட்டால் மக்கள் மறந்து போய் விடுவார்கள். மறுபடியும் கட்சியை ஆரம்பத்தில் இருந்து வளர்க்க வேண்டி இருக்கும்.

இன்றைக்கு பல்வேறு கட்சிகள் தோழமைக்கட்சிகளிடம் எங்களுக்கு 10 சீட்டு கொடுங்கள், ஒரு சீட்டு கூடுதலாக போட்டு கொடுங்கள் என பேரம் பேசிக்கொண்டும், கெஞ்சிக்கேட்டு கொண்டும் இருக்கின்றனர். நம்ம கட்சி மட்டும் தான் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். தமிழகத்திலிருந்து தாமரை சின்னத்தில் வென்று போனால் மட்டுமே நமக்கு மரியாதை இருக்கும். அதனால் தான் நான் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சியில் பாரிவேந்தர் நடத்திய மாநாட்டில் முன்வரிசைகளை தவிர மற்ற எல்லா சேர்களும் காலியாக இருந்தன. இந்த கூட்டத்தில் பேசிய பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, இவ்வளவு பெரிய கூட்டம் எங்கேயும் வந்ததில்லை என்று பேசினார். ஆனால் அவர் காலி சேர்களுடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நிலைமை இப்படி இருக்க இந்த கூட்டத்தை விடவே மோடிக்கு கூட்டம் கம்மி என்று பாரிவேந்தர் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* நாற்றங்காலை கெடுக்கும் அரசியல் பதறு: அண்ணாமலை புளுகினிகளை உளற அனுமதிக்கக்கூடாது; திமிரை அடக்குவோம்; தெர்மாகோல் புகழ் சபதம்
மதுரையில், மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. இதில் தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது: இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு குஜராத் தளமாக விளங்குகிறது. மக்கள் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை ஈனப்பிறவி என அண்ணாமலை விமர்சிக்கிறார். ஒன்றியத்தில் ஆளுகிறோம் என்ற மமதையில் அவர் பேசுகிறார். அண்ணாமலையை அரசியல் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும். இதுபோன்ற புளுகினிகளை தொடர்ந்து உளற அனுமதிக்கக்கூடாது. இவர்கள் நாட்டிற்கு தேவையில்லை. நாற்றங்காலை கெடுக்கும் பதறுகள் அரசியலில் இருக்கக்கூடாது. அவன் யாரையும் மதிப்பதில்லை.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் மத்திய உளவுத்துறை கொடுக்கின்ற சில கணக்குகள், ஆவணங்களை வைத்துக்கொண்டு பேசுகிறார். எனவே இவர் புதுசா கண்டுபிடித்தது போல பேட்டி கொடுக்கிறார். இவர் என்ன சிஐடி வேலையா பார்த்தாரு. நீ என்ன வேலை பார்த்தாய். உனக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு. எடப்பாடி பழனிசாமியை பார்த்து அரைவேக்காடு என்கிறானா. அவனை என்னடா பண்ணுவது. எவ்வளவு திமிரு. இந்த திமிரை அடக்க வேண்டும் என்றால் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் மக்கள். மக்கள் புரட்சியை உருவாக்க வேண்டும். பாஜ கூட்டணியிலிருந்து வெளியே வந்ததால் அதிமுக கிளர்ந்து எழுந்துள்ளது. மதுரை அதிமுக கோட்டை என்பதற்கு நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை உறுதி செய்வோம். இவ்வாறு பேசினார்.

* துரோகியின் வீழ்ச்சி தொடங்கி விட்டது: உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்; எடப்பாடியை விளாசிய டிடிவி
திருவண்ணாமலையில் நேற்று அமுமுக தலைவர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: ஒருசில தனிநபரின் சுய நலத்தால், பதவி வெறியால், பண திமிரால், துரோக புத்தியால், அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இரட்டை இலை சின்னம் இருந்தும், கடந்த 2019 தேர்தலில் ஒரு இடத்தில்தான் அதிமுக வெற்றிபெற்றது. 2021 தேர்தலில் பண பலம் அதிகார பலம் இருந்தும் ஆட்சியை இழந்தனர்.ஆட்சியில் இருந்த அதிமுகவினர் செய்த ஊழலால் முறைகேடுகளால், பழனிசாமி கம்பெனியை மக்கள் ஆட்சியை விட்டு அகற்றினர். வினை விதைத்தவன் வினை அறுப்பான், உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பதைப்போல, எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் ராஜதந்திரம் எனும் பெயரில் துரோகம் செய்தவர்கள் வீழ்த்தப்படுவார்கள். துரோகம் செய்தவர்களை மக்கள் தோற்கடிப்பார்கள். மக்கள் தண்டனை கொடுப்பார்கள். துரோகம் என்ற வார்த்ைதயை கண்டு அரசியல்வாதிகள் பயப்படுகிற வகையில், துரோகம் செய்தவர்கள் வீழ்த்தப்படுவார்கள் என்பதற்கு உதாரணமாக பழனிசாமியின் வீழ்ச்சி இருக்கும். அதன்பிறகு, அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். இவ்வாறு பேசினார்.

* நாமக்கல் தொகுதியில் போட்டியிடும்: கொமதேக வேட்பாளர் அறிவிப்பு
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் கொமதேகவின் சின்ராஜ் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இப்போது அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த சூரியமூர்த்தியை (51) வேட்பாளராக நேற்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ அறிவித்தார். பிஏ படித்துள்ள இவர், விவசாயம் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியிலும், 2006ம் ஆண்டு வெள்ளக்கோயில் தொகுதியிலும், 2016ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். 10 ஆண்டுகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பணியாற்றியுள்ளார்.

You may also like

Leave a Comment

16 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi