புதுடெல்லி: கனடாவில் ஜூன் 15 முதல் 17ஆம் தேதி வரை நடக்கும் ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ஜி 7 அமைப்பில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. 2019 முதல் ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கும் அழைப்பு வந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டுக்கான ஜி 7 உச்சி மாநாடு கனடாவில் இந்த மாதம் ஜூன் 15 முதல் ஜூன் 17 வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கான முறைப்படியான அழைப்பு கனடா நாட்டில் இருந்து பிரதமர் மோடிக்கு வரவில்லை. எனவே முதல்முறையாக ஜி 7 மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிக்க இருப்பதாக தகவல் பரவியது. இந்த சூழலில் நேற்று கனடா பிரதமர் மார்க் கார்னி தொலைபேசி மூலம் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு கனடாவில் உள்ள கனனாஸ்கிசில் நடக்கும் ஜி 7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்ததற்காக நன்றி தெரிவித்தார்.
ஜூன் 15-17ல் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் மோடி: கனடா பிரதமர் தொலைபேசியில் அழைப்பு விடுத்ததால் முடிவு
0