டெல்லி : மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி 100 முறைக்கும் மேலாக இஸ்லாமியர்கள் மீது வெறுப்புப் பிரச்சாரம் செய்து இருப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. வெறுப்புப் பேச்சை தூண்டிய பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் என்ற தலைப்பில், தன்னார்வ தொண்டு நிறுவனமான மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, இஸ்லாமியர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் மீது தொடர்ந்து வெறுப்பை பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மார்ச் 16ம் தேதிக்கு பின்னர், அவர் பேசிய 173 பிரச்சாரக் கூட்டங்களில் 110 முறைகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் தனது அரசியல் எதிரிகளை இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கு மட்டுமே ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார் என்றும் இது போன்ற தகவல்கள், மூலம் பெரும்பான்மை இந்து சமூகத்தினர் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவதே பிரதமர் மோடியின் நோக்கம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக, இதர தலைவர்கள் பலரும் இஸ்லாமியர், இதர சிறுபான்மையினருக்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்பியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.