புதுடெல்லி: குஜராத் மக்களிடம் ஆன்லைன் ஆப் மூலம் சீனாவை சேர்ந்தவர் 9 நாளில் ரூ.1400 கோடி மோசடி செய்த போது மோடியும், அமித்ஷாவும் என்ன செய்தனர் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. குஜராத்தில் 1200 பேரை ஆன்லைன் பந்தய செயலி மூலம் சீனாவை சேர்ந்த வூ உயன்பே ஏமாற்றி ரூ.1400 கோடி மோசடி செய்துள்ளார். வெறும் 9 நாளில் அவர் இந்த மோசடியை செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி சீனாவுக்கு சென்று விட்டார். இதுபற்றி இப்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த மோசடி குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா நேற்று கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்க அமலாக்க இயக்குநரகம், சிபிஐ மற்றும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (எஸ்எப்ஐஓ) போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியர்களை கொள்ளையடித்து நாட்டை விட்டு வெளியேறிய சீன மோசடியாளர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சீனாவை சேர்ந்த வூ உயன்பே கால்பந்து பந்தய செயலியைப் பயன்படுத்தி குஜராத்தில் 1,200 பேரிடம் வெறும் ஒன்பது நாட்களில் ரூ.1,400 கோடியை ஏமாற்றி நாட்டை விட்டு ஓடிவிட்டார். பிரதமர் மோடியோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ அவரை தடுக்க முடியாது.
இந்த மோசடி தொடர்பாக ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வௌியிட வேண்டும். விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி மற்றும் தற்போது சீனாவை சேர்ந்தவர் என்று அடுத்தடுத்து மக்களை கொள்ளையடித்தவர்கள் தப்பி ஓடியுள்ளார்கள். மோடி அரசு பொதுப் பணத்தின் பாதுகாவலர் அல்ல. மாறாக கொள்ளையடித்து, வெளிநாடுகளுக்கு பறந்து செல்ல விரும்பும் மோசடி நபர்களுக்கு உதவும் ஒரு பயண நிறுவனம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனா நபரின் மோசடி குறித்து 2022 டிசம்பர் வரை குஜராத் காவல்துறைக்கு 1,088 புகார்கள் வந்துள்ளன.
மேலும் ஹெல்ப்லைன் மூலம் 3,600 க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் மோடி அரசு சீன செயலிகளை தடைசெய்வது மட்டும் செய்யாது. விசாரணை அமைப்புகளால் ஏன் சீன நாட்டவரை இந்தியாவிலிருந்து தப்பிச் செல்வதற்கு முன் கைது செய்ய முடியவில்லை அல்லது அவரது டிஜிட்டல் மோசடியை கண்டு பிடிக்க முடியவில்லை? மோடி அரசு ஏன் தூங்கியது? அரசியல் எதிரிகளுக்கு எதிராக மட்டும் விசாரணை அமைப்புகள் ஏன் ஆயுதம் ஏந்துகின்றன? அது மட்டும்தான் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் செயல்திட்டமா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.