காரைக்குடி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் காரைக்குடியில் நேற்று அளித்த பேட்டி: பெட்ரோல், டீசல் விலைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எண்ணெய் நிறுவனங்கள்தான் முடிவு செய்யும் என்று கூறியவர்கள் இன்று தேர்தலை கருத்தில் கொண்டு விலையை குறைத்துக் கொண்டு வருகின்றனர். தேர்தலையொட்டி சில அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். பாஜ ஜனநாயக விரோதமான, பாசிச சர்வாதிகார அரசை நடத்துகிறது. இ.டி, ஐ.டி, தேர்தல் ஆணையம், சிபிஜயை சுதந்திரமாக செயல்பட முடியாமல் ஒரு நெருக்கடியை உருவாக்கி, மோடியின் உத்தரவை நிறைவேற்றும் அமைப்புகளாக மாறி விட்டன.
இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பேராபத்து. அரசியலமைப்புச் சட்டம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. தமிழக மக்கள் மோடியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெள்ள பாதிப்புக்கு வரவில்லை. ஒத்த பைசா கூட தரவில்லை. மாநில அரசு நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றத்தை நாடவேண்டி உள்ளது. மோடி 7 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். அதேபோல் அமித்ஷா வருவதாக கூறி பயணத்தை ரத்து செய்துள்ளார்.
தமிழகத்திற்கு சென்று எந்த பயனும் இல்லை என்று அமித்ஷா பயணத்தை ரத்து செய்துள்ளார். மோடியும் அதே முடிவெடுத்தால் அவருக்கு நல்லது. அலைச்சல் குறையும். பயண நேரங்கள் குறையும். தேவையில்லாமல் வந்து அலைகிறார். எத்தனை முறை வந்து அலைந்தாலும் பயனில்லை. தமிழகத்தின் மீது பாசம் உள்ளது போல் நடிக்கிறார். மோடி அடுத்தமுறை பிரசாரத்திற்கு வரும்போது, சமஸ்கிருதம், ஹிந்திக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள், அதே போல் தமிழ் மொழி வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள் என்று சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.