சென்னை: அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிறகு அண்ணாமலை மீது கோபத்தில் இருப்பதால், மோடி, அமித்ஷா ஆகியோர் சந்திக்க மறுத்து விட்டனர். இதனால் நட்டா, நிர்மலாவுடன் ஆலோசனை நடத்தியபோது ராஜினாமா செய்வதாக கூறியதால், அதை ஏற்க மறுத்த தலைவர்கள், அவர் தனி அணி அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இதனால் இனி அதிமுகவுடன் கூட்டணி வாய்ப்புகள் குறைந்து விட்டது என்று தெரியவந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து பாஜ தலைமையிலான கூட்டணியில் அதிமுக இடம் பெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ இடம் பெற்றது. அதில் 4 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக, பாஜ இடையே கருத்து மோதல் உருவானது.
தொடர்ந்து பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அவர் வந்த பிறகு பாஜவை வளர்க்க போகின்றேன் என்ற பெயரில் கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுகவை கடுமையாக விமர்ச்சிக்க தொடங்கினார். குறிப்பாக எடப்பாடியுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்தார். இந்த உச்சக்கட்ட மோதலுக்கு மத்தியில் முன்னாள் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மற்றும் அண்ணா குறித்து சர்ச்சை கருத்தை அண்ணாமலை தெரிவித்தார். இதனால், அதிமுகவினர் அண்ணாமலை மீது தங்களின் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அண்ணாமலையை மாற்ற வேண்டும். அப்போது தான் கூட்டணி தொடரும் என்று அதிமுக தலைவர்கள் பேட்டியளித்தனர். அதிமுக நம்மை மீறி என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்று பாஜ தலைமை கருதியது. இதைத் தொடர்ந்து இனிமேலும் வெட்கம் கெட்டு போய் பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு அதிமுக வந்தது.
தொடர்ந்து கடந்த 25ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாஜவுடன் அதிமுக கூட்டணி கிடையாது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகுவதாக அதிரடியாக அறிவித்தது. இது பாஜவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக கூட்டணி முறிவு குறித்து டெல்லி மேலிடம் தான் பதில் சொல்லும் என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் அண்ணாமலை அவசரம் அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்படும் முன் அண்ணாமலை, ‘‘அரசியலில் இருந்து என்னை விடுவித்தால் தோட்டத்துக்கு சென்று விடுவேன்.
தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது’’ என்று தனது விரக்தியை தெரிவித்தார். இதனால், அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற போகிறார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக கூட்டணி முறிவுக்கு பிறகு அண்ணாமலை முதல் முறையாக டெல்லிக்கு சென்றார். டெல்லியில் பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க அண்ணாமலை சந்திக்க அனுமதி கேட்டார். ஆனால் இருவரும் அண்ணாமலையை சந்திக்க மறுத்து விட்டனர். இதனால் நேற்று மாலையில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசினார்.
முன்னதாக தமிழகத்தில் கள ஆய்வு செய்த நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் ஒரு நல்ல கூட்டணியை கெடுத்து விட்டீர்கள். தமிழகத்தில் பாஜ தோல்விக்கு நீங்கள்தான் முழு பொறுப்பாவீர்கள். உங்கள் மீது மோடி, அமித்ஷா ஆகியோர் கோபமாக உள்ளனர். தென்மாநிலங்களில் பாஜ மிகவும் வீக்காக உள்ளது. நீங்கள் அதை மேலும் பலவீனப்படுத்தி விட்டீர்கள் என்று சத்தம்போட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அண்ணாமலை, நட்டாவிடம் நான் வேண்டுமானால் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், தமிழகத்தில் கூட்டணியில் இருந்து பாஜ விலகியதால் மகிழ்ச்சியில் அதிமுகவினர் இருப்பதாகவும், நேற்று மாலை தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சிறுபான்மை மக்களுக்கு தொடர்ந்து ஆதராக இருக்கப்போவதாக அறிவித்து விட்டார் என்ற தகவல் நட்டாவுக்கு கிடைத்தது.
இதனால், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாது. அண்ணாமலையை மாற்றினாலும், அதிமுகவினருக்காக இறங்கிப்போனதுபோல ஆகிவிடும். அவர்கள் அப்போது கூட்டணிக்கு வராவிட்டால் அண்ணாமலையை இழந்ததுபோல ஆகிவிடும் என்று கணக்குப்போட்டவர்கள், ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர். நீங்களே தொடர்ந்து கட்சி பொறுப்பில் இருங்கள். ஆனால் கூட்டணி குறித்தோ, அதிமுக குறித்தோ கொஞ்ச நாளுக்கு அமைதியாக இருங்கள். பின்னர் தனி அணி அமைக்கலாம் என்று அறிவுரை கூறினர். ஆனால் எப்படியும் அமித்ஷாவையாவது சந்திக்க அனுமதியுங்கள் என்று நட்டாவிடம் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அமித்ஷாவிடம் கேட்டுச் சொல்வதாக கூறியுள்ளார். நேற்று இரவு 10 மணி வரை அமித்ஷாவை அண்ணாமலை சந்திக்க முடியவில்லை.
அதேநேரத்தில், அண்ணாமலைக்கு ஆதரவாக இருக்கும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவரும், பாஜகவின் பொதுச் செயலாளருமான பி.எல்.சந்தோசை அண்ணாமலை சந்தித்துப் பேசினார். இன்றும் டெல்லியில் தங்கியிருக்க அண்ணாமலை முடிவு செய்தார். இதற்கிடையில் சென்னை அமைந்தரையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று காலை பாஜ மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருந்தது. அண்ணாமலை தலைமையில் நடைபெற இருந்த இந்த கூட்டத்தில் தேசிய அமைப்பு பொது செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது.
அண்ணாமலை டெல்லியில் உள்ளதால் இந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாளை(4ம் தேதி) முதல் அண்ணாமலை நடைப்பயணத்தை தொடங்க உள்ளதையும் ஒத்தி வைத்துள்ளார். 5ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால், 6ம் தேதி முதல் தனது நடை பயணத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அண்ணாமலையின் ராஜினாமாவை மேலிடம் ஏற்க மறுத்ததோடு, அவரை தொடர அனுமதி அளித்துள்ளதால், பாஜ தலைமையில் தமிழகத்தில் தனி அணி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜவிற்கு வேறு வழி இல்லாததால், இதற்கு மேலிடம் பச்சைக் கொடி காட்டி விட்டதாகவும் கூறப்படுகிது. தமிழகத்தில் ஒரு நல்ல கூட்டணியை கெடுத்து விட்டீர்கள். தமிழகத்தில் பாஜ தோல்விக்கு நீங்கள்தான் முழு பொறுப்பாவீர்கள். உங்கள் மீது மோடி, அமித்ஷா கடும் கோபத்தில் உள்ளனர். தென்மாநிலங்களில் பாஜ ஏற்கனவே பலவீனமாக உள்ளது. இப்போது உங்கள் பங்குக்கு அதை நீங்கள் மேலும் பலவீனப்படுத்தி விட்டீர்கள் என நட்டாவும் நிர்மலா சீதாராமனும் அண்ணாமலையிடம் சத்தம் போட்டுள்ளனர்.