புதுடெல்லி: பிரதமர் மோடியின் 3.0 ஓராண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள. ஒன்றிய அமைச்சகங்களுக்கும் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து வரும் ஜூன் 9ம் தேதியுடன் 11 ஆண்டுகாலம் நிறைவு செய்கிறது. ஒன்றிய பாஜக கூட்டணி அரசு, தங்களது 3.0 ஒரு வருட நிறைவை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதேநேரம் அனைத்து அமைச்சங்களும் தங்களது 11 ஆண்டுகளால செயல்திறனை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘அனைத்து அமைச்சகங்களும் தங்கள் சாதனைகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் கடந்த ஒரு வருடத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் 11 ஆண்டு ஆட்சி காலத்தின் முழு சாதனைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த அறிக்கைகள் தொகுக்கப்பட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்படும். அவர்கள் ஒன்றிய அரசின் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் கையேட்டை உருவாக்குவார்கள்.
ஜூன் மாதத்தில் மட்டும், ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம், ஜூன் 9ம் தேதி மோடி அரசின் 3.0-இன் ஒரு வருட நிறைவு, ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம், ஜூன் 25ம் தேதி அவசரநிலை பிரகடனத்தின் 50ம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேற்கண்ட திட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து நேற்றைய ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.