கோவை: மோடியே அலறும் விதத்தில் சிறப்பான ஆட்சி நடப்பது தமிழ்நாட்டில்தான் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். கோவை வடக்கு மாவட்ட திமுக மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதி கழகம் இணைந்து கலைஞரின் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை ஆர்.எஸ்.புரம் லைட்ஹவுஸ் மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய் மட்டுமே பேசி வருகிறார். எதையெடுத்தாலும் பொய் பேசி அரசியல் செய்ய முயற்சிக்கிறார். இந்தியாவிலேயே, மோடியை எதிர்த்து, மோடியே அலறும் விதத்தில் சிறப்பான ஆட்சி நடப்பது தமிழ்நாட்டில்தான். அனைவருக்கும் வழிகாட்டியாக முதல்வர் விளங்கி கொண்டிருக்கிறார். பெண்களுக்கான ஆட்சியாக நமது ஆட்சி நடைபெற்று வருகிறது.
அமித்ஷா, தமிழகம் வருவதால் பயப்படுவதாக சொல்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலின்போது, மோடி தமிழகத்திற்கு 8 முறை வந்தார். ஒன்றும் செய்ய முடியவில்லை. அமித்ஷா வந்து என்ன செய்ய போகிறார்? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி அடைந்ததை போன்று வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியடைய வேண்டும், அதற்கான மக்கள் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.