புதுடெல்லி: வரி பயங்கரவாதம் இன்று இந்தியாவில் மிகப்பெரிய ஆபத்தாக உள்ளது என்று பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது வாட்ஸ்அப் சேனல் மூலம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
வரி பயங்கரவாதம் என்பது பா.ஜ.ஆட்சியின் ஆபத்தான முகம். இதுதான் உண்மை. நடுத்தர வர்க்க மக்களின் வருமானத்தின் மீது இன்று இந்தியாவில் வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் சம்பளம் பல ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை.
வருமானம் அப்படியே உள்ளது. ஆனால் வருமான வரி பெருமளவில் அதிகரித்து வருகிறது. பயங்கர பணவீக்கத்தின் இந்த காலகட்டத்தில், எல்லாவற்றுக்கும் அதிக ஜிஎஸ்டி செலுத்தி பிழைக்கும் நடுத்தர மக்கள் சிந்திக்க வேண்டும். உங்கள் வருமானம் பெரிய கார்ப்பரேட்கள் அல்லது வணிகர்களின் வருமானத்தை விட அதிகமாக இருக்கிறதா? உங்களுக்கு அரசாங்க வசதிகளால் ஏதேனும் சிறப்பு பலன் கிடைக்கிறதா? இல்லை என்பது சரிதானே? அப்படியானால் உங்களிடமிருந்து ஏன் இந்த அளவு கண்மூடித்தனமான வரி வசூலிக்கப்படுகிறது?. உங்களை பயமுறுத்தி, உங்களிடம் அரசின் விருப்பத்தை திணிப்பதன் மூலம் உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.
இது வரி பயங்கரவாதத்தின் சக்கரவியூகம். பிரதமர் மோடி தனது நண்பர்களின் செல்வத்தை காப்பாற்றவும், அதிகரிக்கவும் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் முதுகை உடைக்கிறார். இந்த பயங்கரவாதம் மற்றும் அநீதிக்குஎதிராக அனைத்து கடின உழைப்பாளி, நேர்மையான இந்தியர்களுடன் நான் நிற்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.