புதுடெல்லி: அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, மும்பையில் தனது நிறுவனத்திற்காக வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் இந்திய சந்தையில் நுழைவது உறுதியாகி உள்ளது. உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில், உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நுழைய ஆர்வமாக உள்ளது. இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே எலான் மஸ்க் இந்தியா வர இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் அவரது பயணம் ரத்தானது. ஆனாலும் இந்தியா வர ஆர்வமாக இருப்பதாக மஸ்க் குறிப்பிட்ட சில தினங்களில் ஒன்றிய அரசு புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையை அறிவித்தது.
அதன்படி, இந்தியாவில் உற்பத்தி ஆலையை தொடங்கும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை, எலான் மஸ்க் நேரில் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், டெஸ்லா நிறுவனம் மும்பையில் தனது கிளைக்கு ஆட்கள் தேவை என அதன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வணிக செயல்பாடு ஆலோசகர், சர்வீஸ் மேனேஜர், சர்வீஸ் டெக்னீஷியன் என 13 பிரிவுகளில் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இது டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைய இருப்பதை உறுதிபடுத்தி உள்ளது.