புதுடெல்லி: நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் போது மணிப்பூர் நிலவரத்தை பிரதமர் மோடி வெளியில் கூறுவது உரிமை மீறும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். மணிப்பூர் பிரச்னை தொடர்பாக நேற்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வெளியே கருத்து தெரிவித்தார். இதுபற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில்,’ நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது பிரதமர் மோடி, மணிப்பூர் பிரச்னை பற்றி வெளியே பேசுவது உரிமை மீறல் ஆகும். மேலும் இது மரபு மீறிய செயல்.
இந்த பிரச்னை பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்து இருக்கிறோம். அப்படி இருக்கும் போது அவைக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிராக மோடி செயல்பட்டுள்ளார். விதி எண் 267ன் படி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்னை பற்றி பேச எனக்கு அனுமதி இல்லை. அங்கு பிரதமர் அமைதியாக இருக்கிறார். ஆனால் வெளியில் அதைப்பற்றி பேசுகிறார்’ என்று தெரிவித்தார்.