டெல்லி: கடவுளின் அவதாரமான மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி இன்று ரஷ்யா புறப்பட்டு சென்றிருக்கும் நிலையில், எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மணிப்பூர் சென்றுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘இன்று, கடவுளின் அவதாரமான பிரதமர் மோடி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றிருக்கிறார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, அசாம் மற்றும் மணிப்பூர் சென்றுள்ளார்.
ரஷ்யா -உக்ரைன் போரை கடவுளின் அவதாரமான பிரதமர் மோடி முடிவுக்குக் கொண்டு வருவார் என்று ஒருகாலத்தில் கூறப்பட்டது. ஆச்சரியப்படும் அளவில், தற்போது மோடியின் மாஸ்கோ பயணம் குறித்து இன்னும் விநோதமான காரணங்கள் கூறப்படலாம். மணிப்பூரில் வன்முறை வெடித்த பிறகு, கடந்த 14 மாதங்களில் ராகுல் மூன்று முறை அங்கு சென்றுள்ளார். ஆனால் இதுவரை, கடவுளின் அவதாரமான மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லை அல்லது விரும்பவில்லை. அவர், பாதிக்கப்பட்ட மாநில முதல்வரையோ, தனது சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களையோ, பிற அரசியல் கட்சித் தலைவர்களையோ, மாநில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களையோ கூட சந்திக்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.