டெல்லி: மத ரீதியில் வாக்கு கேட்கும் வகையில் பிரதமர் மோடி பேசியது சட்டவிரோதமானது என்று திரிணாமுல் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான, இந்தியாவின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் சேலத்தை அடுத்துள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜ சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கடந்த 19ம் தேதி நடந்தது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி; பிற மதங்கள் குறித்து பேசாத இந்தியா கூட்டணி கட்சிகளை எப்படி சகித்துக் கொள்வது என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருந்தார். இந்து மதத்துக்கு எதிரான சிந்தனையை இந்தியா கூட்டணி விதைப்பதாகவும் பிரதமர் மோடி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் மத ரீதியில் வாக்கு கேட்கும் வகையில் பிரதமர் மோடி பேசியது சட்டவிரோதமானது என்று திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது. பிரதமரின் பேச்சு இந்தியா முழுவதும் நேரலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி புகார் மனு அளித்துள்ளது. பிரதமர் மோடி ஆற்றிய உரையால் நாட்டில் மத ரீதியில் பதற்ற நிலை ஏற்படும் ஆபத்து உள்ளது. சேலத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை நாட்டில் கலவரத்தை ஏற்படுத்திவிடும். மோடியின் சட்டவிரோத பிரச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறியத் வேண்டியது அவசர அவசியமாகும். பிரதமர் மோடி மத அடிப்படையில் வாக்கு சேகரித்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாடியுள்ளது.