“விருதுநகர் மாவட்டம்ன்னாலே வறட்சிதான். இங்க நிலத்தடி தண்ணி கம்மியாதான் இருக்கும். இதை வச்சி பெரிய அளவுல விவசாயம் செய்ய முடியாது. ஆனா இருக்குற தண்ணிய வச்சி என்னல்லாம் பண்ண முடியுமோ, அத பண்றோம். மரவள்ளியில பொதுவா வரிசைக்கு வரிசை ரெண்டரை அடிலேர்ந்து 5 அடி வரைக்கும் இடைவெளி கொடுப்பாங்க. நான் 8 அடி கொடுத்துருக்கேன். இது மூலமா 2 ஏக்கர்ல பாயுற தண்ணிய வச்சி 4 ஏக்கர்ல சாகுபடி செஞ்சிருக்கேன். இந்த முறையில தண்ணியும் மிச்சம் ஆகுது, பராமரிப்பும் எளிமையா இருக்கு’’ என பேச ஆரம்பித்தார் தளவாய்புரம் கண்ணன்.பெண்கள் அணியும் நைட்டிகளுக்கு பேர் போன ஊர் தளவாய்புரம். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள இந்த ஊரில் வசிக்கும் கண்ணன் புதுமையாக விவசாயத்தில் ஏதாவது புதிது புதிதாக செய்து அசத்துவார். ஏற்கனவே துளசி, லெமன் கிராஸ், பாமரோசா, வெட்டிவேர் என வாசனை தரும் பயிர்களை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்து லாபம் அள்ளியவர். இப்போது 8 அடி இடைவெளியில் மரவள்ளியைப் பயிர் செய்கிறார். தரைப்பகுதியில் சாம்பல் தெளிப்பு, பயிர்களுக்கு வைக்கோலால் மூடாக்கு என எளிமையான தொழில்நுட்பங்களைப் புகுத்தி மரவள்ளியை செழிப்பாக்கி இருக்கிறார்.
ராஜபாளையத்தில் இருந்து தளவாய்புரம் செல்லும் வழியில் அயன் கொள்ளங்கொண்டான் விலக்கு என்ற இடத்தில் இருந்து இடதுபுறம் திரும்பினால் சில கிலோமீட்டர் தொலைவில் ஜமீன் கொள்ளங்கொண்டான் என்ற கிராமத்தை அடையலாம். சிறு சிறு மலைக்குன்றுகள் சூழ அமைந்திருக்கும் இந்த கிராமத்தில்தான் அமைந்திருக்கிறது கண்ணனின் மரவள்ளி வயல். ஆளுயரம் தாண்டி வளர்ந்திருக்கும் மரவள்ளியில் சொட்டுநீர்க்குழாய் மூலம் தண்ணீர் பாய்கிறது. வயலை நமக்கு சுற்றிக் காண்பித்தபடி பேச்சைத் தொடங்கினார் கண்ணன்.“ போன வருசம் குங்கும ரோஸ் ரக மரவள்ளியைப் பயிர் செஞ்சேன். இது சாப்பிட நல்லா இருக்கும். ஏக்கருக்கு 10 டன் விளைஞ்சது. நல்லா விலையும் கிடைச்சிது. அதனால் அதே ரகத்தை மறுபடியும் பயிர் பண்ணலாம்னு நெனச்சேன். இந்தப் பகுதியில தண்ணி கொஞ்சம் கம்மியாதான் கிடைக்குது. தரைக்கிணறுல 60 அடிக்கும் கீழ தண்ணி இருக்கு. அத எடுத்து பாசனம் செய்றோம். சில நேரங்கள்ல தண்ணி பத்தாது. சொட்டுநீர் பாசனம் கொடுத்தாலும் அதையும் குறைச்சி கொடுக்கணும்னு நெனைச்சேன். இதனால 8 அடி இடைவெளி விட்டு நட்டிருக்கேன்.
மரவள்ளியைப் பயிர் செய்ய அதிக உழவு ஓட்டத் தேவையில்ல. ஆழமாவும் ஓட்ட வேணாம். ஆழமா ஓட்டுனா கிழங்கு ரொம்ப கீழே போய் வளரும். இது அறுவடை செய்ய கஷ்டம் கொடுக்கும். அதனால 2 உழவு ஓட்டினாலே போதும். 2வது உழவு ஓட்டும்போது ஏக்கருக்கு 6 டிராக்டர் தொழுவுரம் போடுவோம். அப்புறமா ரோட்டோவேட்டர் வச்சி கட்டியில்லாம ஓட்டுவோம். அந்த சமயத்துல, ரைஸ் மில்லுல நெல் அவிக்கிறப்ப கிடைக்கிற சாம்பலை வாங்கிட்டு வந்து நிலத்துல போடுவோம். இதனால தரை ரொம்ப பொலபொலப்பா மாறும். இதுல கிழங்கு மேலேயே நல்லா வளரும். அறுவடை பண்ணும்போது ஈசியா இருக்கும். கையாலயே பிடுங்கலாம். கிழங்கு நிலத்துல தங்காது. முழுமையா அறுவடை செய்யலாம்.
உழவு பண்ணி தயார்படுத்தி இருக்குற நிலத்துல ஒரு பாசனம் செஞ்சி 2 அடிக்கு இடையில ஒரு விதைக்கரணைகளை ஊனுவோம். முன்னாடி பண்ண சாகுபடியில இருந்து தரமான குச்சிகளை எடுத்து வச்சி விதைக்கரணை தயார் பண்ணுவோம். 2 அடி உள்ள விதைக்கரணைகளை நிலத்துல ஊனுவோம். இதை விதைநேர்த்தி பண்ணுனா நோய்த்தாக்கம் குறையும்னு சொல்வாங்க. நான் விதைநேர்த்தி எதுவும் பண்ணல. விதை ஊனிய மறுநாள், 2வது நாள்னு 3 நாளுக்கு தொடர்ந்து பாசனம் செய்வோம். தரை காயாமல் பாசனம் பண்ணுனா விதைக்கரணைகள் நல்லா முளைவிட்டு தளிர் வரும். 4,5 நாள்ல பெரும்பாலான கரணைகள் முளைச்சிரும். முளைவிட்ட பிறகு 1 நாள் விட்டு 1 நாள் பாசனம் பண்ணலாம். செடி வளர வளர பாசனத்தைக் குறைச்சிக்கலாம். அக்டோபர், நவம்பர், டிசம்பர்னு 3 மாசத்துக்கு மழை இருக்கும். அந்த சமயத்துல பாசனம் பண்ண தேவையில்ல.
5 மாசத்துல செடிகள் நல்லா முளைச்சி வந்துடும். அது வரைக்கும் வயல்ல களை இல்லாம பாத்துக்குவோம். 8 அடி இடைவெளி இருக்குறதால டிராக்டர் வச்சி தாராளமா உழவு பண்ண முடியுது. இதனால் களையில்லாம நிலம் சுத்தமா இருக்கு. செடிகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்குது. சூரியஒளி பட்டு செடிங்க ஆரோக்கியமா வளருது. மரவள்ளிக்கு அதிக பராமரிப்பு தேவைப்படாது. இதுல மேல் உரம், மருந்துன்னு எதுவும் கொடுக்கத் தேவையில்ல. 8 லேர்ந்து 12 மாசத்துக்குள்ள அறுவடை செய்துடலாம். இதுல ஏக்கருக்கு 10 டன் கிழங்கு மகசூலா கிடைக்கும். இந்த ரக கிழங்குகள கேரளாவுல விரும்பி சாப்பிடுறாங்க. இதனால கேரள வியாபாரிங்க நிலத்துக்கே நேரடியா வந்து அறுவடை பண்ணி கிழங்கை லாரியில ஏத்திக்கிட்டு போயிடுறாங்க. இங்கேயே எடை போட்டு உரிய பணத்தையும் கொடுத்துடுறாங்க. சராசரியா ஒரு கிலோ கிழங்கு 10 ரூபாய்னு விலை போகும். 10 டன் கிழங்கு மூலமா 1 லட்ச ரூபாய் வருமானமா கிடைக்குது. இதுல செலவுன்னு பாத்தா அதிகபட்சமா 50 ஆயிரம் ஆகும். இதுபோக 50 ஆயிரம் லாபமா கிடைக்கும். நான் இப்போ 4 ஏக்கர்ல இந்த மரவள்ளியைப் பயிர் பண்ணிருக்கேன். இதுமூலமா கண்டிப்பா 2 லட்சம் லாபம் கிடைக்கும். மரவள்ளி அறுவடை முடிஞ்சதும், அந்த வயல்ல வேற பயிரை சாகுபடி செய்வோம். இதுபோல சுழற்சி முறைய கடைபிடிச்சா பயிர் நல்லா விளையும். நோய், பூச்சித்தாக்கம் குறையும்’’ என பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
கண்ணன்: 93658 34590
கருக்கா சாம்பல்
அரிசி ஆலைகளில் நெல்லை அவிப்பதற்காக, நெல்லில் உள்ள கருக்கா மூலம் அடுப்பு எரிப்பார்கள். அவித்த பின்பு கருக்காவின் சாம்பல் அதிகமாக இருக்கும். இது அரிசி ஆலைகளில் மிகுதியாக இருப்பதால், கேட்பவர்களுக்கு இலவசமாகவே கொடுக்கிறார்கள். தளவாய்புரம் கண்ணன் அந்த கருக்கா சாம்பலை வாங்கி வந்து வயலில் இட்டு, நிலத்தை வளமாக்குகிறார். கருக்கா சாம்பல் கொட்டப்பட்ட தரைப்பகுதி வெள்ளை நிறத்தில் மிகவும் பொலபொலப்பாக இருக்கிறது. இது பயிர்கள் செழித்து வளரவும், எளிதான அறுவடைக்கும் ஏதுவாக இருக்கிறது.
வைக்கோல் மூடாக்கு
கண்ணனின் வயலில் மரவள்ளி செடிகளுக்கு வைக்கோல் மூலம் மூடாக்கு அமைத்துள்ளார். நெல் சாகுபடி மூலம் அவரது வயலில் கிடைக்கும் வைக்கோலை வைத்தே இதை செய்கிறார். இவ்வாறு மூடாக்கு அமைப்பதன் மூலம் சொட்டுநீர் வைக்கோலில் ஊறி, ஈரப்பதம் நிலையாக இருக்கிறது. மழை பெய்தாலும் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. வைக்கோல் ஊறி எருவாகவும் மாறுகிறது.
வாசனை எண்ணெய் ஆலை
தனது வயலில் துளசி, லெமன் கிராஸ் உள்ளிட்ட வாசனை தரும் பயிர்களை விளைவிப்பதோடு, அவற்றைப் பிழிந்து எண்ணெய் எடுத்து சென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறார். எண்ணெய்ப் பிழிவதற்கான அமைப்பை வயலிலேயே நிறுவி இருக்கிறார்.