Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாதவரத்தில் ரூ1.80 கோடியில் கட்டப்பட்ட நவீன பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கு தயார்

மாதவரம்: மாதவரத்தில் ரூ.1.80 கோடியில் கட்டப்பட்ட நவீன பேருந்து நிலையம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. மாதவரம் தொகுதி, 3வது மண்டலம், 25வது வார்டில் மாதவரம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து கோயம்பேடு, உயர் நீதிமன்றம் உள்பட பல்வேறு வழித்தடங்களுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் மாதவரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதால் எப்போது பயணிகள் கூட்டம் மிகுந்து பரபரப்புடன் காணப்படும்.

இந்நிலையில், மாதவரம் பேருந்து நிலையத்தை நவீன கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும், என்று மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மண்டலக்குழு தலைவர் நந்தகோபால் இதற்கான தீர்மானத்தை சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் முன்வைத்தார். அதனைத்தொடர்ந்து, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் மாதவரம் பேருந்து நிலையத்தை நவீன முறையில் சீரமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த மே மாதம் அதற்கான பணிகளை மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

உதவி பொறியாளர் சரவணமூர்த்தி தலைமையில் அலங்கார வளைவு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் அமர்வதற்கு நவீன இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மாதவரம் பேருந்து நிலையம் கட்டமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றன. தற்போது நவீன பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க தயார் நிலையில் உள்ளது. விரைவில் மாதவரம் பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.