சென்னை: தன்னாட்சிக் கல்லூரிகளில் மாதிரிப் பாடத்திட்டத்தை நடத்துவது குறித்து அந்தந்த கல்லூரி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள விளக்கம்: மாதிரிப் பாடத்திட்டத்தின் நோக்கத்தை விளக்க உயர் கல்வித் துறை அமைச்சரின் தலைமையில் கடந்த 2ம் தேதி சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. அதில், இந்த புதிய மாதிரி பாடத்திட்டம் 70 சதவீத தன்னாட்சிக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
சில தன்னாட்சிக் கல்லூரிகள், அவர்களது கல்லூரியில் தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், இந்த மாதிரி பாடத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் அவர்களது கல்லூரி தன்னாட்சியின் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கருதுவதாக கருத்துகள் தெரிவித்தன. அதன்பேரில் தன்னாட்சிக் கல்லூரிகள் சார்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளை உயர்கல்வித்துறை கவனமுடன் பரிசீலித்தது. இதன்படி, தன்னாட்சிக் கல்லூரிகள் இந்த புதிய மாதிரி பாடத்திட்டத்தை தங்களது கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திக் கொள்வது குறித்து அவர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம்.