மொடக்குறிச்சி: மொடக்குறிச்சியில் 15வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கிளை நூலகங்கத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொடக்குறிச்சியில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இதில், 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளது. 6800 உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை வழக்கம் போல் வார விடுமுறை அளிக்கப்பட்டாலும் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்காக வெள்ளிக்கிழமை நூலகம் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த நூலகத்தை மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மஞ்சக்காட்டு வலசு, வேலம்பாளையம், ஆனந்தம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ஆலங்காட்டுவலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூலகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மொடக்குறிச்சி, முத்தூர், பாசூர், கொடுமுடி, எழுமாத்தூர், சிவகிரி, லக்காபுரம், சின்னியம்பாளையம், கணபதிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்காக தயாராகும் மாணவ, மாணவிகள் இந்த நூலகத்தில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், மொடக்குறிச்சி கிளை நூலகம் 65 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருவதால் இந்த நூலகத்தை தினசரி 100க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தினசரி நூலகத்திற்கு வருபவர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து படித்து வருவதால் போதுமான இடவசதி மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நெருக்கடி அமர்ந்து படித்து வருகின்றனர்.
இந்நிலையில், மொடக்குறிச்சி கிளை நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் நூலகர்கள் நெருக்கடி இல்லாமல் அனைத்து வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிட நூலகம் கட்டித்தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி மொடக்குறிச்சி கிளை நூலகத்தில் மொடக்குறிச்சி பேரூராட்சியின் சார்பில் 15வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி கிளை நூலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கூடுதல் நூலக கட்டிடத்தில் உள் கட்டமைப்பு வசதிகள், புதிய கணினிகள், இருக்கைகள், நூல்கள் அடுக்கி வைப்பதற்கான ரேக்குகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதுகுறித்து மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணன் கூறும்போது, 65 ஆண்டுக்கு மேலாக இந்த நூலகம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
குறுகிய இடத்தில் இந்த நூலகம் அமைந்துள்ளதால் நூலகத்திற்கு படிக்க வரும் பொதுமக்கள் அங்கு அமர்ந்து படிக்க சிரமப்பட்டு வந்தனர். இதனையடுத்து பேரூராட்சியின் மூலம் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் ரேக்குகள், புதிய கணினிகள், சேர்கள் என அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இந்த கட்டுமான பணி இன்னும் 2 மாதத்தில் முடிக்கப்பட்டு நூலகர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.