Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மொடக்குறிச்சி, அந்தியூர், மேட்டுப்பாளையம் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: கடந்த தேர்லை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என வலியுறுத்தல்

சென்னை: மொடக்குறிச்சி, அந்தியூர், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் முழுவீச்சில் ஆளுங்கட்சியான திமுக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், “உடன் பிறப்பே வா” என்ற பெயரில் ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மொடக்குறிச்சி, அந்தியூர், மேட்டுப்பாளையம் ஆகிய 3 தொகுதிகளின் நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசினார். இதில் 3 தொகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசி அவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

அவர்களும் மனம் விட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கருத்துகளை தெரிவித்தனர். அவர்களின் கருத்துகளை கவனமுடன் முதல்வர் கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு பல்வேறு விளக்கங்களையும் அளித்தார். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மணி நேரம் என, சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொகுதி மக்கள் திமுக ஆட்சியை பற்றி என்ன நினைக்கிறார்கள். மக்கள் இன்னும் அரசிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றும் கருத்து கேட்டறிந்தார்.

மேலும் திமுக அரசின் சாதனைகளை விளக்கி கடந்த தேர்தலை விட வரும் சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும். ஒற்றுமையுடன் பணியாற்றி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி வாகை சூட உறுதி எடுக்க வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக நிர்வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டதால் திமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.