Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நடமாடும் கண் சிகிச்சை பிரிவு மூலமாக 27,000 கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டம்: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் நடமாடும் கண் சிகிச்சைப் பிரிவு மூலமாக ஆண்டுதோறும் சுமார் 27,000 கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்நோக்கு மாவட்ட நடமாடும் கண் சிகிச்சைப் பிரிவுகளை நிறுவ தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடமாடும் பிரிவுகள் ஒளிவிலகல் குறைபாடுகள், கண்புரை, பார்வை நரம்பு சிதைவினால் ஏற்படும் கண் அழுத்த நோய் (கிளகோமா), நீரிழிவு காரணமாக ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோய் (டயாபடிக் ரெட்டினோபதி) மற்றும் ஏனைய கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பயனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று பரிசோதனை செய்வதற்கான வசதிகளை வழங்கும்.

இந்த முன்னோடி முயற்சியின் தொடக்கமாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் சேலம், ராமநாதபுரம், திருவள்ளூர், கடலூர், கரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, மதுரை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் ஏற்கனவே, நடமாடும் கண் மருத்துவ சிகிச்சை பிரிவுகள் அரசால் அமைக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டில் மட்டும் செயல்பாட்டிலுள்ள 11 நடமாடும் பிரிவுகள் வாயிலாக 840 முகாம்கள் நடத்தி, 57,543 பயனாளிகளை பரிசோதனை செய்ததுடன், 10,803 கண்புரை உள் விழிவில்லை (ஐஓஎல்) அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது, கூடுதலாக தர்மபுரி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இப்பிரிவுகள் நிறுவுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் ரூபாய் 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு, போதுமான எண்ணிக்கையில் முகாம்கள் நடத்தி, பயனாளிகளை பரிசோதித்து, தேவை ஏற்படின் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். இந்த தொடக்க முயற்சி, ஆண்டுதோறும் சுமார் 27,000 கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கண்புரையினால் ஏற்படும் பார்வை குறைபாடு இல்லாத மாவட்டங்களை உருவாக்கப்படும். இந்த முன்முயற்சி, ஒவ்வொரு வட்டாரத்திலுள்ள துணை கண் மருத்துவ உதவியாளர்களின் (பி.எம்.ஓ.ஏ) உதவியுடன் முகாம்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் வாயிலாக சமுதாய பங்களிப்பையும் உறுதி செய்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.