*மக்கள் ஆதரவு தர ஜம்போ சர்க்கஸ் கலைஞர்கள் வேண்டுகோள்
தியாகராஜநகர் : நெல்லையில் ஜம்போ சர்க்கஸ் முகாமிட்டுள்ள நிலையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தற்போதைய நிலையில் சர்க்கஸ் கலையை வளர்க்க மக்கள் அதிக ஆர்வம் தர வேண்டும் என சர்க்கஸ் கலைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வியக்க, ரசிக்க வைக்கும் கலையாக சர்க்கஸ் கலை உள்ளது.
பல அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தும் சாகச கலைஞர்களுடன் வன விலங்குகளும் போட்டி போட்டு சர்க்கஸ் நிகழ்ச்சிகளை பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வந்தன. வன விலங்குகளை பயன்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவித்த பிறகு சர்க்கஸ் கலைஞர்கள் தங்களது திறமையை வைத்து இக்கலையை முடிந்த வரை வளர்க்க முயற்சிக்கின்றனர்.
இன்றைய சர்க்கஸ் நிலவரம் குறித்து நெல்லை நீதிமன்றம் எதிரே தற்போது முகாமிட்டுள்ள ஜம்போ சர்க்கஸ் நிறுவனத்தின் மேலாளர்கள் டைட்டஸ் வர்கீஸ், ராஜீவன் ஆகியோர் கூறியதாவது:
ஜம்போ சர்க்கஸ் புகழ்பெற்ற ஜெமினி சர்க்கஸ் நிறுவனத்தை சேர்ந்தது தான் 1948ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ஜெமினி சங்கர் இதனை தொடங்கி வைத்தார்.
இன்று வரை இந்தியாவின் மிகப்பெரிய சர்க்கசாக மக்களின் வரவேற்பை பெற்று இயங்குகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 1977ல் ஜம்போ சர்க்கஸ் தொடங்கப்பட்டு இதுவும் இந்தியாவில் புகழ் பெற்று செயல்படுகிறது.
1999க்கு முன்னர் வரை சர்க்கசில் சிங்கம், புலி, யானை, கரடி, நீர்யானை, கரும்புலி போன்ற வனவிலங்குகள் பயிற்சி பெற்று சர்க்கஸ் கலைஞர்களுக்கு இணையாக சாகசம் செய்து மக்களை கவர்ந்தது.
அப்போது தொலைக்காட்சி, செல்போன் போன்றவை இல்லாத காலமாக இருந்தது. இதனால் ஒரு பெரிய நகரில் முகாமிட்டு அதன் 35 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளவர்களும் வந்து காத்திருந்து ரசித்து சென்றனர். 1999ல் உச்சநீதிமன்றம் வன விலங்குகளை பயன்படுத்தக்கூடாது என சட்டம் இயற்றியது. அப்போது முதல் தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் பயன்பாடும் அதிகரிக்கத்தொடங்கியது.
இதனால் சர்க்கஸ் கலையை மக்களிடம் கொண்டு செல்வது சவாலானதாக மாறியது. ஆயினும், ஜிம்னாஸ்டிக் போன்ற வியக்கவைக்கும் கலைஞர்களின் திறமையான சர்க்கஸ் நிகழ்ச்சிகளால் இப்போதும் மக்கள் விரும்பும் வகையில் தாக்குப்பிடித்து இயங்குகிறோம், கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் மிகுந்த சிரமப்பட்டோம் தற்போது மீண்டும் ஓரளவு இயங்க முடிகிறது.
இந்தியாவில் எந்த பெரிய நகரங்களில் முகாமிட்டாலும் அரசு உரிய அனுமதிகளை தடையின்றி தருகிறது. ஒவ்வொரு காட்சியிலும் 2 மணி நேரத்திற்கு மேல் 28 முதல் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். 20 பெண்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றன.
மனிப்பூர் மாநிலத்தை சேர்ந்த கலைஞர்கள் மற்றும் ஆப்பிரிக்கா, தான்சானியா போன்ற நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் திகில் நிகழ்ச்சிகளை நடத்துவது ரசிகர்களை அதிகம் வியக்கவைக்கிறது.
நெல்லையில் சனி, ஞாயிறு 3 காட்சிகளும் மற்ற நாட்களில் 2 காட்சிகளும் நடத்தப்படுகின்றன. நெல்லை ரசிகர்கள் எப்போதும் போல் சர்க்கஸ் கலைக்கு ஆதரவு தரவேண்டும் என்றனர்.