Friday, April 12, 2024
Home » எம்எல்ஏக்கள், மாஜி அமைச்சர்கள் பிள்ளை பிடிக்கும் படலம் பெயிலியர் : தூண்டிலில் சிக்காத ‘பிக் பிஷ்’, வதந்தி பரப்பும் பாஜ ஐடி விங்; பின்புலத்தில் அண்ணாமலை

எம்எல்ஏக்கள், மாஜி அமைச்சர்கள் பிள்ளை பிடிக்கும் படலம் பெயிலியர் : தூண்டிலில் சிக்காத ‘பிக் பிஷ்’, வதந்தி பரப்பும் பாஜ ஐடி விங்; பின்புலத்தில் அண்ணாமலை

by Ranjith

நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா தொடங்கினாலும் தொடங்கியது, அதிமுக-பாஜ இடையே ஆள் பிடிக்கும் படலமும் ஜரூராக நடந்து வருகிறது. பெரிய புள்ளிகளை யார் இழுப்பது என்று இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய விஜயதரணி பாஜவில் இணைந்தார். இதையடுத்து விஜயதரணியை வரவேற்ற அண்ணாமலை, விஜயதரணி மட்டுமில்லை இன்னும் பிற கட்சிகளில் இருந்து கூட முக்கிய பிரமுகர்கள் பாஜவுக்கு தாவுகிறார்கள் என ஒரு செய்தியை கொளுத்தி போட்டார். பாஜவுக்கு பொய் பேசுவது கைவந்த கலையாச்சே…

இதற்கு சிறந்த உதாரணம், பிரதமர் தொடங்கி ஒன்றிய அமைச்சர்கள் பலரும் பொய்களை உண்மை போன்று நாடாளுமன்றத்திலேயே பேசுகிறார்கள் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். தேர்தல் திருவிழா வேறு ஆரம்பித்து விட்டதால் அவர்களின் பொய் பித்தலாட்டங்கள் எல்லை மீறும் வகையில் இருக்கும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் நிர்வாகிகளுக்கு அலர்ட் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக வாயில் வடை சுடும் அண்ணாமலை, புள்ளி விவரத்துடன் பேசுகிற என்ற பெயரில் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வருகிறார்.

இதுமட்டுமில்லாமல் தலைவர்கள் குறித்து அவதூறு பேசி வருகிறார். இந்நிலையில் தான் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான திருநாவுக்கரசர், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட அதிமுக, காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏக்கள் பலர் பாஜவுக்கு தாவுகின்றனர் என்ற தகவல் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த எஸ்.பி.வேலுமணி, ‘3% இருக்கும் பாஜவுல நான் போய் சேருவேனா? டோன்ட் கேர் என விட்டுவிடுங்கள்’ என்று பதிலடி தந்தார். திருநாவுக்கரசரோ சற்று ஆவேசமடைந்து, ‘நான் பாஜவுக்கு போறேன் சொன்னவன் செருப்பாலே அடிப்பேன்… சீமான் மாறி கெட்ட வார்த்தையிலதான் பேசணும்’ என்று சூடாக பதில் தந்தார்.

இதேபோல் அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன், ‘அதிமுகவில நான் ராஜாவாக இருக்கேன்… அங்க போய் அண்ணாமலைக்கு கூஜா ஏன் தூக்கணும்’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். இப்படி யார் யார் பெயர்கள் அடிப்பட்டதோ, அவர்கள் எல்லாம் பாஜவை கடுமையாக விமர்சித்து தரமான பதிலடி தந்து உள்ளனர். இப்படிப்பட்ட வதந்திகளை யார் பரப்புவது என்பதை கண்டறிய சம்பந்தப்பட்ட கட்சியினர் மோப்பம் பிடிக்க தொடங்கினர். அதில் சிக்கியது தான் பாஜ ஐடி விங் இதுபோன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருவதை அவர்கள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

பாஜவுடன் பெரிய கட்சிகள் கூட்டணி வராததால் பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் கடும் அப்செட்டில் உள்ளனர். இதனால் முக்கிய புள்ளிகளை இழுத்து கட்சிக்கு பலம் சேர்க்கும் படலத்தில் அண்ணாமலைக்கு அசைமென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜ ஐடி விங் மூலம் அண்ணாமலை ஒரு பட்டியலை கொடுத்து, இவர்கள் எல்லாம் பாஜவுக்கு வர போகிறார்கள் என்று செய்தி பரப்ப அசைமென்ட் கொடுத்து உள்ளார். அதன்படி அவர்களும் செய்தியை பரப்பி வருவதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், முக்கிய புள்ளிகள் (பிக் பிஷ்)யாரும் பாஜவுக்கு செல்லவில்லை. இவ்வாறு பட்டியலை வெளியிட்டு அவர்களை பாஜவின் மூம்மூர்த்திகள் (ஈ.டி., சிபிஐ, ஐ.டி) மூலம் மிரட்டி தங்கள் பக்கம் வர வைக்கின்றனர். சிலரிடம் ‘ப’ வைட்டமினான ஸ்வீட் பாக்ஸ்களை கொடுத்து வருகின்றனர். பாஜவில் தற்போது இருப்பவர்கள் பெரும்பாலானோர் பாஜ சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இல்லை. மாற்று கட்சியில் இருந்து மேற்குறிப்பிட்ட தந்திரங்கள் மூலம் இழுக்கப்பட்டவர்களே அதிகம்.

தேர்தல் கள நிலவரம் அவர்களுக்கு சாதகமாக இல்லாததை உளவுத்துறை மூலம் அறிந்த பாஜ, தேசிய ஊடகங்கள் மற்றும் மாநில ஊடகங்களை கையில் வைத்து மீண்டும் பாஜதான் ஆட்சிக்கு வரும் என்ற பிம்பத்தை உருவாக்கி முக்கிய கட்சிகளை உடைத்து தனக்கு சாதகமான நிலையை உருவாக்கி வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கூறுகையில், ‘அண்ணாமலையின் பிள்ளை பிடிக்கும் படலம் தமிழ்நாட்டில் எடுபடாது. ஏக்நாத் ஷிண்டேக்களை தேடி இது வடநாடு இல்லை. இது தமிழ்நாடு. உலகிலேயே சிறந்த ஜனநாயக திருவிழாவை பணநாயக திருவிழாவாக மாற்றி வரும் பாஜவுக்கு, இந்த தேர்தலில் மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள்’ என்று தெரிவித்து உள்ளனர்.

You may also like

Leave a Comment

18 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi