திண்டிவனம்: பாமகவில் அன்புமணிக்கு ஆதரவான 2 எம்எல்ஏக்களின் கட்சி பதவியை அதிரடியாக பறித்த ராமதாஸ், அன்புமணிக்கு பக்கபலமாக செயல்பட்டு வரும் அவரது தீவிர ஆதரவாளர்களையும் ஒட்டுமொத்தமாக களை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை நடக்கும் புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்திவிட்டு அவர் இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் அதிடியாக நீக்கி புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். பொருளாளர் திலகபாமாவுக்கு பதிலாக சையத் மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து வழக்கறிஞர் சமூகநீதி பேரவையின் தலைவராக இருந்த பாலு நீக்கப்பட்டு வழக்கறிஞர் கோபு நியமிக்கப்பட்டார். மேலும் பாமகவின் பொது செயலாளராக இருந்த வடிவேல் ராவணன் நீக்கப்பட்டு அப்பொறுப்பில் முரளி சங்கர் நியமனம் செய்யப்பட்டார். பாமகவில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை ராமதாஸ் புதிதாக நியமனம் செய்தார். இந்நிலையில் நேற்றும் ராமதாசின் அதிரடி தொடர்ந்தது. சேலம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த மேட்டூர் எம்எல்.ஏ சதாசிவத்தை அதிரடியாக மாற்றிய ராமதாஸ் அவருக்கு பதிலாக ராஜேந்திரன் என்பவரை நியமனம் செய்தார். இதேபோல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த எம்எல்ஏ சிவக்குமாரை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு கனல் பெருமாளை நியமனம் செய்தார்.
மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவராக கப்பை.கோபால், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக வைகை சரவணன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக மணி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக ராஜி உள்ளிட்டோரை நேற்று நியமனம் செய்தார். மேலும் சமூக ஊடக பேரவையில் பல்வேறு குழப்பங்கள் ராமதாசுக்கு எதிரான பதிவுகள் உள்ளிட்டவை வெளிவந்த நிலையில் சமூக ஊடக பேரவை தலைவராக இருந்த தமிழ்வாணன் நீக்கப்பட்டு தொண்டி ஆனந்தன் என்பவரை ராமதாஸ் நியமனம் செய்தார்.
இந்நிலையில் தைலாபுரத்தில் நாளை காலை மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் வன்னியர் சங்க மாவட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் முரளி சங்கர், சமூக நீதிப் பேரவை கோபு, பொருளாளர் சையத் மன்சூர், சமூக ஊடகப் பேரவை தொண்டி ஆனந்தன் ஆகியோரை நிர்வாகிகளுக்கு ராமதாஸ் அறிமுகம் செய்து வைக்கிறார். மேலும் அன்புமணி 10 மாவட்டங்களில் மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்த ஏற்பாடுகளை செய்த முக்கிய நிர்வாகிகள் யார் யார் என தற்போதுள்ள நிர்வாகிகள் மூலம் அடையாளம் கண்டு அவர்களையும் கட்சியை விட்டு நீக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாளை நடக்கும் கூட்டத்தில் பூம்புகார் மகளிர் மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனை வழங்குகிறார். அதேபோல் பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கான தேதி குறித்தும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு ராமதாஸ் முக்கிய முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. நாளைய கூட்டத்தில் 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.