பொன்னேரி: பழவேற்காடு அரசு பள்ளியில் 163 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் வழங்கினார். பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஜகதம்பாள் சுப்பிரமணியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது.
இவ்விழாவிற்கு, மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி, பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயம் உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர், உதவி தலைமை ஆசிரியர் அகத்தியன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவி, பழவை அலவி, கன்னிமுத்து, ஜெயராமன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு, அப்பள்ளியில் கல்வி பயிலும் 163 மாணவர்களுக்கு, தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.