சென்னை: கடந்த மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்து இருக்கேன், இப்போது பாஜகவில் சேர்ந்து 6 மாதமாகியும் எந்த பதவியும் கொடுக்காம இருக்கிறீர்கள் என விஜயதாரணி ஆதங்கப்பட்டுள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழக பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இருந்த பதவியை விட்டுவிட்டு பாஜகவுக்கு வந்திருக்கிறேன்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் வரவில்லை, எதிர்பார்ப்போடு தான் வந்திருக்கிறேன். நன்றாக உழைக்க வேண்டும், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக பதவி தேவை. ஆனால், பாஜகவில் சேர்ந்து 6 மாதமாகிவிட்டது. இன்னும் பதவி கொடுக்கவில்லை. அது பற்றி பிரச்சனை ஒன்றுமில்லை; நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் எனக்கு நல்லது செய்வீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.
என்னை போன்றவர்களின் பணியை பாஜக நிச்சயம் பயன்படுத்தும். கேசவவிநாயகம் அண்ணனுக்கு என்னை நன்றாகத் தெரியும். என் தொகுதிக்காரர். என்னை பல ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக பார்த்தவர். நம் தலைவர் அண்ணாமலை தம்பி எப்போதும், ‘‘உங்களை போல தியாகம் செய்துவிட்டு கட்சிக்கு வந்தவர் வேறு யாரும் இல்லை, உங்களை கட்சி சரியாகப் பயன்படுத்தும்’’ என அடிக்கடி சொல்வார்.
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் தராமல் இந்த தப்பு செய்தார்கள், அதை தட்டிக் கேட்டேன். பாஜகவில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தார்கள். நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை நிதித்துறை அமைச்சர் பதவியை கொடுத்தார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உதாரணம் பாஜகவில் இருக்கிறது. அதைப் பார்த்து தான் நான் பாஜகவில் இணைந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.