சென்னை: தேர்தல் வந்து விட்டாலே தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் தலை தூக்குவது வழக்கமான ஒன்று தான். கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களுக்கோ அல்லது தங்களது ஆதரவாளர்களுக்கோ சீட் வாங்குவதற்காக டெல்லியில் முகாமிட்டு போர்க்கொடி தூக்குவார்கள். இது காங்கிரஸ் கட்சியில் காலம் காலமாக நடந்து வரும் ஒன்று தான். ஆனால் தற்போது பெரிய அளவில் கோஷ்டி மோதல் இல்லை என்றாலும், தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வரும் செல்வப்பெருந்தகை தற்போது உச்சகட்ட உட்கட்சி மோதலை எதிர் கொண்டு வருகிறார்.
கட்சி தொடர்பான எந்த ஒரு முடிவு எடுத்தாலும் தனிச்சையாகவே முடிவு எடுப்பதாகவும், கட்சி மூத்த தலைவர்களையோ, முக்கிய நிர்வாகிகளையோ அழைத்து கலந்தாலோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக கட்சியில் தற்போது எதிரொலித்து வருகிறது. அதன் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கியாக வேண்டும் என்று 30க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது தமிழக காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செல்வபெருந்தகைக்கு எதிராக கே.எஸ்.அழகிரி, டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார், மாணிக்கம் தாகூர் என பல்வேறு மூத்த தலைவர்கள் ஒருங்கிணைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் அதிருப்தி மாவட்ட தலைவர்கள் ஒருசேர டெல்லிக்கு படையெடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து செல்வப்பெருந்தகையை மாற்ற கோரவும் முடிவு செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், நேற்று மாலை 22 மாவட்ட தலைவர்கள், ஒரு எம்எல்ஏ தமிழக காங்கிரஸ் பட்டாளமே டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்கள் இன்று காலை முதல் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு சேர இன்று மதியம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடாங்கரை நேரில் சந்தித்து பேசுகின்றனர்.
அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவரை உடனடியாக மாற்றக் கோரியும் மனு ஒன்றை அவர்களிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல இன்னும் இரண்டு நாட்கள் டெல்லியில் முகாமிடவும் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடமும் செல்வப்பெருந்தகையை மாற்ற கோரும் ேகாரிக்கையை முன் வைக்க உள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியில், செல்வப்பெருந்தகைக்கு எதிராக மாவட்ட தலைவர்கள் ஒரு சேர எதிர்ப்பு தெரிவித்து டெல்லிக்கு படையெடுத்திருப்பது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.