சென்னை: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி அறிவித்துள்ள முதல்வருக்கு எஸ்சி, எஸ்டி, பணியாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்டி பணியாளர் நலச் சங்க மாநில தலைவர் மணிமொழி, பொதுச்செயலாளர் டி.மகிமை தாஸ் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து கடந்த அரசு விட்டுச்சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை, கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயும் அரசு அலுவலர், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் செயல் பட்டு வருகிறது.
தற்போது ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவித்த உடனேயே, தமிழ்நாடு அரசும் 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 1.7.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கும் என அறிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நெஞ்சார நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகராஜாவும் அகவிலைப்படி உயர்வுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.