Thursday, June 12, 2025
Home செய்திகள்Showinpage ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்குவதே இலக்கு; தொகுதிவாரியாக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தகவல்

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்குவதே இலக்கு; தொகுதிவாரியாக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தகவல்

by Neethimaan


சென்னை: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்குவதே இலக்கு என்றும், தொகுதிவாரியாக நிர்வாகிகள் சந்திப்பை தொடங்க உள்ளேன் என்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுக பொதுக்குழு மதுரை மாநகரில் மற்றொரு சித்திரைத் திருவிழா போல நடந்தது, திமுக வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறது. மே 31 மாலையில் மதுரை விமான நிலையத்திலிருந்து 22 கி.மீ. தூரத்திற்கான ரோடுஷோவில் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று அன்பை வெளிப்படுத்தினர். சிறுவர், சிறுமியர், பள்ளி – கல்லூரி மாணவர்கள், பெண்கள், வயதில் மூத்தவர்கள் என எல்லா வயதினரும் கையசைத்தும், கை கொடுத்தும், செல்பி எடுத்தும், இருவண்ணக் கொடியை அசைத்தும் வரவேற்பளித்தனர்.

ரோடுஷோ வழியில் பந்தல்குடி எனுமிடத்தில் பகுதியை முதல்வரான என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சன கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன். அதுமட்டுமல்ல, அந்த இடத்திற்கு மாலை சென்றபோது, என் வாகனத்தை விட்டு இறங்கி, அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்ற விவரத்தையும் கேட்டு, அதனை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டேன். துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பாஜ மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல்.

மறைப்பை அகற்றி, மறைக்கப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக முழுமையான தீர்வுக்கான வழி செய்யும் மாடல் என்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி, திமுகவை விமர்சிப்பதையே முழுநேர, பகுதிநேர தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கும் புரிந்திருக்கும். துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., இந்தியாவின் பாதுகாப்பு குறித்து ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் குழுவிற்கு தலைமையேற்றுச் சென்றிருப்பதால் அவரால் இந்த பொதுக்குழுவில் பங்கேற்க முடியவில்லை. தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு திமுக முன்னெடுக்கும் செயல்பாடுகள் தொடர்பான 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுகவில் தற்போது 23 சார்பு அணிகள் உள்ள நிலையில், புதிதாக கல்வியாளர் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி என இரண்டு அணிகள் தொடங்கப்பட இருப்பதையும், அதற்குரிய சட்டத்திருத்தங்களையும் கிரிராஜன் எம்.பி. வாசித்தார்.

திமுக தணிக்கைக் குழு அறிக்கையைச் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அளித்தார். கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதில் தொடங்கி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜவையும் அதனுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் அதிமுகவையும் மக்களின் ஆதரவுடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி, திமுக 7வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது வரையிலான 27 தீர்மானங்களும் உடன்பிறப்புகளாம் உங்கள் மீது உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சிறப்புத் தீர்மானமாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை திமுக தலைவர் என்ற முறையில் நானே பொதுக்குழுவில் அறிவித்து, அதனை முழுமையாக நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.

புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நடைமுறையை திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. காணொலித் திரை வாயிலாக விளக்கினார். இன்றைய அரசியல் களத்தில் சமூக வலைத்தளங்கள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருப்பதால், அதனை நாம் எப்படி கையாளவேண்டும், அதற்கான கட்டமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா விளக்கினார். வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை பொதுக்குழுவில் கழகத் தொண்டர்களாம் உங்களின் குரலாக மண்டலத்திற்கு ஒருவர் என்ற முறையில் இளைய நிர்வாகிகளும், மூத்த நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளைப் பொதுக்குழு மேடையில் பதிவு செய்தனர். பொதுக்குழு இதயம் என்றால், அதில் உடன்பிறப்புகளின் குரல் தான் இதயத்துடிப்பு. அந்தத் துடிப்பின் ஓசை எப்படி இருக்கிறது என்பதை திமுக தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் கவனமாகக் கேட்டுக் கொண்டேன்.

துணைப் பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி, ஆ.ராசா எம்.பி., திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் உரையாற்றியபிறகு, நான் தலைமையுரையாற்ற எழுந்தபோது, எதிரில் இருப்பவர்கள் ஏழாயிரம் பேராக தெரியவில்லை. இரண்டு கோடி உறுப்பினர்களான உடன்பிறப்புகள் அத்தனை பேரையும் மனக்கண்ணால் பார்த்தபடி தான் பேச்சைத் தொடங்கினேன். மக்கள் பாராட்டுகின்ற இது தொடர வேண்டும் என விரும்புகிற திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்திட, 7வது முறையாக திமுக அரியணை ஏறிட உடன்பிறப்புகளான உங்களின் உழைப்புதான் முதன்மையானது. எந்த பதவியையும் பெறாத, எந்தப் பொறுப்புக்கும் வராத, அறிவாலய வாசலைக் கூடி மிதிக்காத, திமுகவே உயிர்மூச்சு, கருப்பு, சிவப்புக் கொடியே தன் சொத்து என நினைக்கிற உண்மைத் தொண்டர்களால் 75 ஆண்டு காலமாக வலிமையுடன் நிலைத்திருக்கும் திமுக,

தொடர்ந்து வெற்றிநடை போடுவதற்கு, தொண்டர்களை நிர்வாகிகள் மதித்து, அரவணைத்து, அவர்களின் கோரிக்கைகளை அறிந்து செயல்படவேண்டும் என்பதே என் தலைமையுரையின் முக்கியப் பகுதியாகும். என் கட்சி, என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம் தொண்டர்கள். நானும் என் குடும்பமும் திமுகவுக்காக இருக்கிறோம். திமுக எனக்கும் என் குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கை நம் தொண்டர்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுகிற வகையில் ஓர் முக்கியமான அறிவிப்பையும் உங்களில் ஒருவனான நான் வெளியிட்டேன். திமுக உறுப்பினர்கள் யாரேனும் எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் இறக்க நேரிட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் ரூ.10 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும்.

படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும் என்பதுதான் உங்களில் ஒருவனான நான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. தொண்டனாகத்தான் என் கட்சி பணி தொடங்கியது. தொண்டர்களுடன் தான் என் திமுக பணி தொடர்ந்தது. தொண்டர்களால் தான் திமுக தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்திருக்கிறேன். இப்போதும் திமுகவின் முதன்மைத் தொண்டன் என்பதில்தான் நான் பெருமை கொள்கிறேன். என் மீது அன்பைப் பொழியும் கோடிக்கணக்கான தொண்டர்கள் மீதுதான் நான் நம்பிக்கை வைத்துப் பொதுக்குழுத் தீர்மானங்களைச் செயல்படுத்த நினைக்கிறேன். ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று வெற்றிகரமாக நிறைவேற்றிட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் பயன் பெற்றிருக்கும். அவர்கள் திமுக அரசு தொடர வேண்டும் என விரும்புவார்கள்.

அப்படி விரும்புகிறவர்களை உறுப்பினர்களாக்கி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மொத்தமுள்ள வாக்காளர்களில் குறைந்தபட்சம் 30 விழுக்காடு வாக்காளர்களாவது திமுக உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்கிற இலக்குடன் உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். உடன்பிறப்புகளான உங்களை நம்பித்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறேன். உங்கள் உழைப்பால் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும். உங்களில் ஒருவனான என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் நீங்கள்தான். உங்களின் நலன், உங்கள் செயல்பாடு, கட்சியின் முன்னேற்றம் ஆகியவற்றை அறிந்துகொள்ள தொகுவாரியாக நிர்வாகிகள் சந்திப்பைத் தொடங்க இருக்கிறேன். தொடர்ச்சியான பயணங்களில் உங்கள் ஊருக்கு வரும்போது உடன்பிறப்புகளின் முகம் கண்டு மகிழ்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று வெற்றிகரமாக நிறைவேற்றிட வேண்டும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi