1972 ஜனவரி 21ம் தேதி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலம் தான் மிசோரம். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் பார்த்தால் அங்கு வெறும் 10 லட்சம் மக்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள். நாட்டிலேயே குறைந்த மக்கள் தொகை கொண்ட 2வது மாநிலம். குறைந்த மக்கள் தொகை கொண்ட முதல் மாநிலம் சிக்கிம். அங்கு மக்கள் தொகை 6.10 லட்சம். மிசோரம் மாநிலத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ மக்கள். 95 சதவீதம் பேர் மீசோ பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். ஆண்டு முழுவதும் ஜில் பிரதேசமாக உள்ள மாநிலம். மே மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலையே 26 டிகிரி செல்சியஸ் அளவு தான். ஜனவரியில் எல்லாம் 20 டிகிரி குளிர் வாட்டிவதைக்கும். மீசோ மொழிதான் இந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி. மக்கள் தான் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். ஆனால் ஆங்கிலம் பொளந்து கட்டுவார்கள். கேரளாவுக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் மிசோரம். இதன் சதவீதம் 91.33. அதிலும் குறிப்பாக பெண்களின் படிப்பறிவு 89.27 சதவீதம். திரிபுரா, அசாம், மணிப்பூர் மாநிலங்கள் எல்லை மாநிலங்களாக உள்ளன. மசோரமின் மூன்று பக்கங்களில் வங்கதேசம், மியான்மர் நாட்டு எல்லைகள் இருப்பதால் இது தீபகற்ப மாநிலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இருநாடுகளுடன் 722 கிமீ எல்லையை மிசோரம் மாநிலம் பகிர்ந்து கொண்டுள்ளது.
அருமையான குளிர் பிரதேசம் என்று நினைத்து இஷ்டம் போல் மிசோரம் மாநிலத்திற்குள் யாரும் நுழைந்து விட முடியாது. அதற்கு என்று தனியாக உள்வரி அனுமதி உள்ளது. இதை பெறாத யாரும் மிசோரம் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. சாலை வழியாக, ரயில் வழியாக பயணிப்பவர்கள் கவுகாத்தியில் உள்ள மிசோரம் இல்லத்திலும், விமானம் வழியாக செல்பவர்கள் லெங்க்புய் ஏர்போர்ட்டிலும் இந்த அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ளலாம். மியான்மர் மற்றும் வங்கதேசம் நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ள இப்போது மிசோரம் பயன்பட்டு வருகிறது. மிசோரம் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள். அங்கு மக்கள் நன்கு படித்து இருந்தாலும் விவசாயம் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். அதனால் மிசோரம் பொருளாதாரம் விவசாயம் சார்ந்தது. மிசோரமில் உள்ள மிகப்பெரிய நதி சம்துய்புய். இது கலடன் அல்லது கோலோடைன் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நதி மியான்மர் நாட்டின் சின் மாநிலத்தில் உருவாகி மிசோரமின் தெற்கு முனையில் உள்ள சைஹா மற்றும் லாங்ட்லாய் மாவட்டங்கள் வழியா சென்று மீண்டும் மியான்மரின் ராக்கைன் மாநிலத்திற்கு செல்கிறது. மேலும் ட்லாங், டட், துய்ரிய், துய்வால் ஆகியவை முக்கிய ஆறுகள். இவை மிசோரம் மாநிலத்தின் வடக்குப்பகுதி வழியாக பாய்ந்து இறுதியில் கச்சார் மாவட்டத்தில் உள்ள பராக் ஆற்றில் இணைகின்றன. பாலக் ஏரி மிசோரம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய ஏரி. 30 ஹெக்டேர் பரப்பில் உள்ளது. இது சைஹா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மிசோரம் மாநிலம் நிலநடுக்கம் அதிகம் பாதிக்கும் பகுதி. அதனால் ஏற்பட்ட பள்ளம் அல்லது வெள்ள பாதிப்பினால் இந்த ஏரி உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தலைநகர் ஐஸ்வாலில் இருந்து 85 கிமீ தொலைவில் தம் தில் ஏரி உள்ளது. இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள ரிஹ்தில் ஏரி மிகவும் முக்கியமானது. மிசோரம் மாநிலம் 3 பக்கங்களிலும் சர்வதேச எல்லைகளால் சூழப்பட்டு இருப்பதால் தீப கற்ப மாநிலம் என்று அழைக்கப்படுகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த மிசோரம் மாநிலத்தில் இதுவரை 5 முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லால் தன்ஹாவ்லா அதிகபட்சமாக 22 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். அதன்பின் மிசோரம் தேசிய முன்னணி தலைவர்கள் ஆட்சி செய்துள்ளனர். தற்போது அங்கு மிசோரம் தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் ஜோரம்தங்கா. இதற்கு முன்பு 1998 முதல் 2003 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். இப்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது. கனவு பலிக்குமா என்பது நவ.7ல் நடக்கும் ஓட்டுப்பதிவில் தெரிந்துவிடும்.
* மிரட்டும் ஜோரம் மக்கள் இயக்கம்
2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சரிவுக்கு முக்கிய காரணம் லால்டுஹவ்மா தலைமையிலான ஜோரம் மக்கள் இயக்கம். ஆளும் மிசோ தேசிய முன்னணி 2,38,168 வாக்குகளை பெற்று 26 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 1,89,404 வாக்குகளை பெற்று 5 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் ஜோரம் மக்கள் இயக்கம் 1,44,925 வாக்குளை பெற்று 8 இடங்களில் வென்றது. பா.ஜனதா 51,087 வாக்குகளை பெற்று ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. எனவே இந்த தேர்தலிலும் ஜோரம்மக்கள் இயக்கம் நிச்சயம் காங்கிரசுக்கு மிகப்பெரிய மிரட்டலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு நடந்த லங்லே நகராட்சியை ஜோரம் மக்கள் இயக்கம் கைப்பற்றியது. 2வது இடம் மிசோரம் தேசிய முன்னணிக்கு கிடைத்தது. காங்கிரசுக்கு 3வது இடம் தான் கிடைத்தது.