காஞ்சிபுரம்: பனப்பாக்கம் அருகே ஆயுதப்படை பணிக்குச் சென்றுவிட்டு, பைக்கில் வீட்டிற்குச் சென்றபோது காவலர் நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ (26). இவர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணிக்குச் சென்றுவிட்டு மீண்டும் இரவு 10 மணியளவில் இளங்கோ வீடு திரும்பினார்.
பனப்பாக்கம் – பானாவரம் சாலையில் சென்றபோது, ஏரிக்கரை அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் பைக் இறங்கியதில் இளங்கோ நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவ்வழியாகச் சென்ற நபர்கள், இதுகுறித்து நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காவலர் இளங்கோவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.