Sunday, July 13, 2025
Home செய்திகள்Showinpage ஏவுகணை வீசி மருத்துவமனையை தாக்கியதால் இஸ்ரேல் பகிரங்க மிரட்டல் ஈரான் சுப்ரீம் லீடர் காமெனியை இனி உயிரோடு விடமாட்டோம்

ஏவுகணை வீசி மருத்துவமனையை தாக்கியதால் இஸ்ரேல் பகிரங்க மிரட்டல் ஈரான் சுப்ரீம் லீடர் காமெனியை இனி உயிரோடு விடமாட்டோம்

by Karthik Yash

பீர்ஷெபா: இஸ்ரேலின் முக்கிய மருத்துவமனை மீது ஈரான் நேற்று ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் சுப்ரீம் லீடர் (உச்ச தலைவர்) அயதுல்லா அலி காமெனியை இனியும் உயிரோடு விட்டு வைக்க மாட்டோம் என இஸ்ரேல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால் அதன் முயற்சியை தடுப்பதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13ம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் நடான்ஸ் உள்ளிட்ட முக்கிய அணு நிலையங்கள் மீது குண்டு வீசப்பட்டுள்ளது.

ஈரானின் அணு சக்தி திட்டத்தின் முக்கிய அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இஸ்ரேலுக்கு மறைமுகமாக அமெரிக்கா உதவி செய்து வரும் நிலையில், ஈரான் உச்ச தலைவர் காமெனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டலை நிராகரித்த காமெனி, ஈரான் ஒருபோதும் யாரிடமும் சரணடையாது என்றும், அமெரிக்கா மூக்கை நுழைந்தால் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கும் என பதில் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இப்போரில் அமெரிக்காவும் களமிறங்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரானின் பல ஏவுகணை தடுப்பு அமைப்புகளை அழித்ததால் தலைநகர் தெஹ்ரான் வான் பரப்பை கைப்பற்றியிருப்பதாக கூறியிருக்கும் இஸ்ரேல் தொடர்ந்து தனது போர் விமானங்களை அனுப்பி குண்டுவீசி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் போர் 7வது நாளாக நேற்றும் நீடித்தது. இதில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 250 கிமீ தொலைவில் உள்ள அரக் கனநீர் அணு உலை மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

ஏற்கனவே இந்த அணு உலையை தாக்கப் போவதாக இஸ்ரேல் முன்கூட்டியே தெரிவித்து அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அணு உலையில் இருந்து கரும்புகைகள் வெளிவந்தாலும், கதிர்வீச்சு கசிவு எதுவும் ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த ஆலை, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணு குண்டாக மாற்றத் தேவையான துணை பொருளான புளூட்டோனியத்தை உற்பத்தி செய்யக் கூடியது. அணு குண்டு தயாரிக்க இந்த ஆலையை ஈரான் பயன்படுத்துவதை தடுக்கவே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.

மேலும், ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய நடான்ஸ் அணு நிலையத்தை சுற்றியுள்ள மற்றொரு தளத்தையும் தாக்கியதாக இஸ்ரேல் கூறியது. ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி நிறுவனம், ஈரான் அணுசக்தி நிலையங்களைத் தாக்க வேண்டாம் என்று இஸ்ரேலை வலியுறுத்தியும் கேட்காமல் தொடர்ந்து குண்டுவீசி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் பல நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் பல ஏவுகணைகள் வானிலேயே தகர்க்கப்பட்டாலும், டெல் அவிவ் அருகே உள்ள ராமத் கான், ஹோலன் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானின் ஏவுகணைகள் குடியிருப்பு கட்டிடங்களை தகர்த்தன.

முக்கியமாக தெற்கு நகரமான பீர்ஷெபாவில் உள்ள முக்கியமான சொரோகா மருத்துவமனை கட்டிடத்தையும் ஈரான் ஏவுகணை தாக்கியது. இதில் 40 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் மருத்துவமனை கடும் சேதமடைந்ததால் உடனடியாக நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனையின் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. ஈரானின் தாக்குதலால் இஸ்ரேல் சந்தித்த பாதிப்புகளில் இது குறிப்பிடத்தக்கதாகும். சொரோகா மருத்துவமனை 1000 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாகும். தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு வந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

பின்னர் பேட்டி அளித்த அவர், ‘‘ஈரானில் உள்ள கொடுங்கோலர்களிடமிருந்து இதற்கான முழு விலையையும் நாங்கள் வசூலிப்போம்’’ என்றார். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரான் உச்ச தலைவர் காமெனிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார். அவர் அளித்த பேட்டியில், ‘‘காமெனி நவீன ஹிட்லர். இனியும் அவரை உயிரோடு விடமாட்டோம். அதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்றார். அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலும் தற்போது காமெனியை கொல்வதாக பகிரங்கமாக கூறியிருப்பதால் இஸ்ரேல்-ஈரான் மோதல் மேலும் உக்கிரமடைந்துள்ளது.

* ஈரான் பயங்கர ஏவுகணையால் இஸ்ரேலுக்கு நெருக்கடி
எதிரிநாட்டு ஏவுகணைகளை தடுக்க அயர்ன் டோம் உள்ளிட்ட சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்புகளை இஸ்ரேல் கொண்டுள்ளது. இதையும் மீறி ஈரானில் சில ஏவுகணைகள் இலக்குகளை தகர்த்து வருகின்றன. இந்த சூழலில், ஈரான் குண்டுமழை பொழியும் ஏவுகணைகளை பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. ஒரே ஏவுகணையில் இருந்து பல சிறிய ஏவுகணைகள் பிரிந்து ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை தகர்க்கக் கூடியவை. இவற்றை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுப்பது முடியாத காரியம். இது தனது பாதுகாப்புக்கு புதிய சவாலை ஏற்படுத்தி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற ஈரானின் ஏவுகணைகள் போரில் இஸ்ரேலுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மருத்துவமனையை தாக்குவது போர் குற்றம்
எதிரிநாட்டின் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச போர் குற்றமாகும். எனவே, மருத்துவமனைகளுக்கு நோயாளிகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஈரான் மீதான தாக்குதலுக்கு முன்பாக இஸ்ரேலில் உள்ள பல மருத்துவமனைகள் கடந்த வாரத்தில் அவசரகால திட்டங்களை செயல்படுத்தி உள்ளன. அடித்தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடங்களுக்கு நோயாளிகள் மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை உடனடியாக அப்புறப்படுத்த முடியாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காசா போருக்கு பிறகு இஸ்ரேல் பூமிக்கடியில் ரகசிய ரத்த வங்கியையும் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சொரோகா மருத்துவமனையை தாக்கவில்லை, இஸ்ரேலின் ராணுவ நிலைகள் மட்டுமே குறிவைக்கப்பட்டிருப்பதாக ஈரான் கூறி உள்ளது.

* 639 பேர் பலி
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானில் இதுவரை 639 பேர் பலியாகி இருப்பதாகவும், 1,329 பேர் காயமடைந்திருப்பதாகவும் மனித உரிமைகள் குழு தகவல் வெளியிட்டுள்ளது. பலியானவர்களில் 263 பேர் பொதுமக்கள், 154 பேர் பாதுகாப்பு படையினர் ஆவர். இஸ்ரேலில் 24 பேர் பலியாகி உள்ளனர்.

* இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை அழைத்து வர முடிவு
சொரோகா மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை அழைத்து வர இந்தியா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இஸ்ரேல், ஈரான் தாக்குதலின் சமீபத்திய நடவடிக்கையை தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வர இந்திய அரசு முடிவு செய்துள்ளது. நில எல்லை வழியாக அவர்கள் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்படுவார்கள். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது’ என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர ஆபரேஷன் சிந்து நடவடிக்கை தொடங்கப்பட்டு நேற்று அதிகாலை 110 மாணவர்கள் டெல்லி வந்தடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* சீனா, ரஷ்யா அதிபர்கள் இஸ்ரேலுக்கு கண்டனம்
இஸ்ரேல்-ஈரான் மோதலால் மத்திய கிழக்கை தாண்டி போர் பரவும் சூழல் உருவாகி இருக்கும் நிலையில், சீனா அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் தொலைபேசியில் நேற்று சுமார் 1 மணி நேரம் உரையாடினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, மத்திய கிழக்கில் அமைதியை மீட்க உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். சர்வதேச பிரச்னையை தீர்க்க படைகளை பயன்படுத்துவது சரியான முறையல்ல என்றும், ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் நடவடிக்கை ஐநா சாசனத்தை மீறுவதோடு சர்வதேச சட்டத்தையும் மீறியிருப்பதாக கூறி உள்ளனர். அப்பாவி பொதுமக்கள் பலியாவது தடுக்கப்பட வேண்டும் என்றும் இதற்கு மத்தியஸ்தம் செய்ய புடின் தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளார். இஸ்ரேல்-ஈரான் மோதலில் சீன அதிபர் ஜின்பிங் கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi