ஐதராபாத்: ஐதராபாத்தில் நேற்று நடந்த 2025ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியின் இறுதி போட்டியில் தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசாத்தா சுவாங்ஸ்ரீ மகுடம் வென்றார். எத்தியோப்பியாவை சேர்ந்த ஹசேட் டெரேஜே இரண்டாம் இடத்தை பிடித்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2025ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி நடந்து வந்தது. 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்ட போட்டியில் இந்தியா சார்பில், ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற நந்தினி குப்தா பங்கேற்றார். 40 பேர் காலிறுதிக்கு முன்னேறினர்.
இதில் முதல் 8 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை நந்தினி குப்தா தவறவிட்டார். அழகி போட்டியின் இறுதி போட்டி நேற்றிரவு ஹைடைக்ஸ் அரங்கில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இறுதிச் சுற்று போட்டியில், தாய்லாந்தின் ஓபல் சுச்சாத்தா சுவாங்ஸ்ரீ 2025ம் ஆண்டிற்கான உலக அழகியாக வெற்றி பெற்றார்.
இதையடுத்து 2024ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா, 2025-ம் ஆண்டுக்கான உலக அழகி ஓபல் சுசாத்தாவிற்கு மகுடத்தை சூடினார். சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த அழகி போட்டியிலும் சுசாத்தா வெற்றி பெற்று மகுடம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தியோப்பியாவை சேர்ந்த ஹசேட் டெரேஜே அட்மாசு இரண்டாவது இடத்தையும், போலந்தை சேர்ந்த மாஜா கிளாஜ்டா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.