டெல்லி: கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் நடந்த ரூ.144 கோடி மோசடி தொடர்பாக ஒன்றிய சிறுபான்மையினர் நல விவகாரத்துறை அமைச்சகம் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய அரசின் சார்பில் சிறுபாண்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதில் நிதி மோசடி நடந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அது தொடர்பாக மூன்றாம் தரப்பு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. மட்டுமின்றி சம்மந்தப்பட்ட அமைச்சகத்தின் சார்பிலும் தேசிய உதவித்தொகை வலைதளத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் 21 மாநிலங்களில் 1,572 நிறுவனங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. அதில் போலி அல்லது செயல்பாட்டில் இல்லாத 830 நிறுவனங்கள் மூலம் 144 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ஒன்றிய சிறுபான்மையினர் நல விவகாரத்துறை அமைச்சகத்தின் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மோசடி நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் அந்த துறை அமைச்சராக முக்தர் அப்பாஸ் நக்வி இருந்தார். 2017-க்கு முன்னதாக மோசடி நடந்ததா என விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.