சென்னை: முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருவொற்றியூர் தொகுதியைச் சேர்ந்த 2 ஆயிரம் பொதுமக்களுக்கு வீட்டு மனைப்பட்டாக்களை இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி வழங்கினார். சென்னை மற்றும் புறகர் பகுதிகளில் வீட்டுமனைப் பட்டாப் பெறுவதில் இருந்த சிக்கல்களைப் போக்கி, பட்டாக்களை வழங்குவதற்கென உயர்நிலைக்குழு ஒன்றை முதலமைச்சர் அவர்கள் அமைத்தார்கள்.
இந்தக் குழுவின் நடவடிக்கையால், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான பட்டா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகளுக்கான பட்டா, ஒருமுறை வரன்முறை செய்யப்படும் வீடுகளுக்கான கணினிப் பட்டா, சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழும குடியிருப்புகளுக்கானப் பட்டா என கிட்டத்தட்ட 33 ஆயிரம் பட்டாக்கள் பொதுமக்களுக்கு குறுகிய காலத்தில் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில்,திருவொற்றியூர் தொகுதியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பட்டாக்கள் தயார் செய்யப்பட்டு, முதற்கட்டமாக 2 ஆயிரம் பட்டாக்களைப் பயனாளிகளிடம் வழங்கியுள்ளனர் .
முன்னதாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு
திமுக இளைஞரணி சார்பில் சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு கலைஞர் நூலகத்தைத் திறக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சென்னை வடகிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்கான கலைஞர் நூலகத்தை விம்கோ நகரில் இன்று அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.