சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ள 1200 மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணைகளை இன்று (06.10.2023) கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும், இன்றைய தொழில்துறைக்கு தேவையான நவீன திறன்களை கற்றுணர்ந்து அவர்களது துறைகளில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற்று வெற்றிபெற ஏதுவாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி வைக்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். இத்திட்டம் தொடங்கிய முதல் ஆண்டில் 13 இலட்சம் மாணவர்கள் பயன் பெற்றும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாம் ஆண்டில் 15 இலட்சம் மாணவர்களுக்கு பயனளித்தும் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டுள்ளது.
துறைவாரியாக ஒவ்வொரு பட்டப்படிப்பிற்கும் ஏற்ற திறன்சார்ந்த கல்வி பாடங்களை உயர்கல்வியில் இணைத்து புதுமை படைத்து வரும் திட்டமே நான் முதல்வன் திட்டம். இத்திட்டம் பொறியியல் கல்லூரிகளில் துவங்கி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு பின்னர் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற முதலாம் ஆண்டு வெற்றி விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் பயன்பெரும் நிலையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியாகும்.
மாணவர்களுக்கான திறன் பயிற்சி, ஆசிரியர்களுக்கான பயிற்றுவிப்பு திறன் பயிற்சி மொழித்திறன் பயிற்சி, மென்திறன் பயிற்சி, திட்ட செயல்முறை பயிற்சி, என பல்வகையான பயிற்சிகளால் மாணவர்களை மேம்படுத்தும் திட்டமாக செதுக்கி பன்முகத்தன்மை கொண்டது இத்திட்டம். நான் முதல்வன் திட்டம் தொடங்கி முதலாம் ஆண்டு இறுதியில் 2022 மார்ச் முதல் மே மாதம் வரை கல்லூரி வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது, இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வருடந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்று முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு பணி ஆணைகள் வழங்கும் விழாவில் 1200 மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது.
நான் முதல்வன் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ள சுமார் 1200 இளைஞர்கள் – இளம்பெண்களுக்கு இன்றைய தினம் பணி நியமன கடிதங்கள் (Job appointment letters)-ஐ கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன்பு கடந்த ஜுன் மாதம், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமின் மூலம் 1.425 இளைஞர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் பணி நியமன கடிதங்களை வழங்கினோம். இப்போது, 4 மாதங்களுக்குள்ளாகவே, மீண்டும் அதே மாதிரியான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைக்கு 1200 பேருக்கு பணி நியமன கடிதங்களை கொடுக்கிறோம் என்றால், இது வெறும் தனி நபர்களுக்கான பணி நியமன ஆணை கிடையாது. 1200 குடும்பங்கள் வாழ்வில் நான் முதல்வன் திட்டம் ஒளியேற்றி வைத்துள்ளது என்று அர்த்தம். இன்றைய சூழலில் பணி வாய்ப்பு என்பது எவ்வளவு அவசியம் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதை உணர்ந்து, இந்த வேலைவாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே என்றிருந்த, கல்வியை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சென்றடைய செய்தவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. நம் மாநில மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படித்த காலம் போய், வெளிமாநில – வெளிநாட்டு மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து படிக்கிற ஒரு சூழலை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். கல்வியில் மட்டுமன்றி தொழில் வளர்ச்சியிலும் தமிழ்நாட்டை பல்வேறு உயரங்களுக்கு கலைஞர் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். வேலைவாய்ப்பை பெருக்கினார்கள். கலைஞர் அவர்களுடைய வழியில், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசும் செயல்பட்டு வருகின்றது. அதற்கு ஒரு சாட்சி தான் இந்த நான் முதல்வன் திட்டம்.
படிக்கின்ற இளைஞர்கள் ஒவ்வொருவரையும் அவரவர் துறையில் முதல்வர்கள் ஆக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் தான் இந்த நான் முதல்வன் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை தாண்டி 13 லட்சம் இளைஞர்கள் பயிற்சி பெற்றனர். நான் முதல்வன் திட்டத்தின் மூலம், 61 ஆயிரத்து 921 பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக, வருடத்திற்கு 40 லட்சம் ஊதியத்துடன் மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. கலைக் கல்லூரிகளை பொறுத்தவரை இதுவரை 57 ஆயிரத்து 312 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
இன்றைக்கு நடைபெறுகிற இந்த நிகழ்ச்சியில், ஆண்டு ஊதியமாக ரூ.2 லட்சத்தில் தொடங்கி ரூ.29 லட்சம் வரை பெறக்கூடிய வகையில், பணி நியமன கடிதங்களை உங்களுக்கு வழங்கியுள்ளோம். வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப தமிழ்நாட்டு மாணவர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கி, அதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்கவே “நான் முதல்வன் ” திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனுடைய தேவை உணர்ந்து, கலை – அறிவியல் கல்லூரிகள் – பாலிடெக்னிக் கல்லூரிகள் – தொழிற்பயிற்சி நிறுவனங்கள் – ஏன், பள்ளிக்கூடங்கள் என அனைத்து கல்வி நிலையங்களுக்கும், இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த காலை சிற்றுண்டித் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவை எல்லாம் எப்படி தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்று வருகின்றனவோ, அவற்றைப் போலவே ‘நான் முதல்வன்’ திட்டமும் இன்றைக்கு ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் ஏற்கனவே குறிப்பட்டது போல, நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக சமீபத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் TCS Sales Force. TVS, FOXCONN, Sutherland, Tech Mahindra, Ashok Leyland, Sundaram Brake linings. Unitech, போன்ற முன்னணி நிறுவனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர்.
நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு, முதலாம் ஆண்டு இறுதியில் பல்வேறு ஊர்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கல்லூரிகளில் மட்டுமன்றி தனியாக பொது இடங்களிலும் முகாம்களும் அரசால் நடத்தப்பட்டன. அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வருடந்தோறும் இதுமாதிரியான வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தவுள்ளோம்.
முன்னணி நிறுவனங்களின் HR Representatives மற்றும் Job Market-ல் உள்ள முக்கிய நபர்களுடன் செய்யப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில், தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்பு தகவல்கள் சேகரிப்பட்டு, அதனடிப்படையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே முதன் முறையாக, கல்லூரி Syllabus-ல் ஒரு பகுதியாகவே, பணி வாய்ப்பை பெறுவதற்கான திறனை வளர்த்துக்கொள்ள Soft skills மற்றும் employability skills சார்ந்த பயிற்சிகள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கட்டணமின்றி வழங்கப்படுகின்றது. பிரபலமான கல்லூரிகள் · முக்கிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் சிறு நகரங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள கல்லூரிகளிலும் இந்த மென் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் எந்த மாதிரியான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதை அறிந்து கொள்ள, தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டு செயல்பாடு (Industry Academia Collaboration) மிக மிக அவசியம். எனவே தான், தொழில் நிறுவனங்கள் – துறைசார்ந்த வல்லுநர்கள் – உயர் கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகளின் ஆலோசனையின்படி, நான் முதல்வன் திட்டத்துக்கான பாட முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய சூழலில் வேலைவாய்ப்பை தரக்கூடிய Artificial Intelligence, Fin Tech, Big Data, Meta Verse, Textile Technology, Food Preservation Technology, Tourism and Hospitality போன்ற துறைகள் சார்ந்த பாடத்திட்டங்கள். உங்களுக்கு பெரிதும் பலன் அளித்துள்ளன. இத்தகைய முயற்சியால், முதலீடு செய்வதற்காக தமிழ்நாட்டை தேடி வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
குறிப்பாக அந்நிறுவனங்கள், தமிழ்நாட்டை Skilled Work Force-ஐ கொண்ட மாநிலமாக பார்க்கின்றன என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன். எந்தெந்த துறையில், என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது தொடர்பாக நம் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்காக. டிசிஎஸ் அயான் நிறுவனத்துடன் இணைந்து ஓர் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டத்தை செயல்படுத்த இன்றைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. TCS ION (அயான்) நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதன் மூலம், நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்த படிப்புகளுக்கேற்ற திறன் படிப்புகள் கண்டறியப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
அரசுத்துறையில் வேலைவாய்ப்பினை வழங்கவும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்டுசொல்லவேண்டுமென்றால், தமிழ்நாட்டு இளைஞர்கள் IAS, IPS, IRS, IFS போன்ற ஒன்றிய அரசுப்பணிகளுக்கு வர வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் போட்டித்தேர்வு பிரிவுகளை கடந்த ஜுன் மாதம் தொடங்கி வைத்தோம். மேலும், தமிழ்நாடு அரசு நடத்துகிற மதிப்பீட்டுத் தேர்வில் வெற்றி பெறுகிற 1000 பேருக்கு 10 மாதங்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளன.
இப்படி தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெருக்க, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன் பலனாக இன்றைக்கு பணி நியமன கடிதங்களை பெற்றுள்ள உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இன்றைய தினம், பணியாளராக வேலைக்கு செல்லவுள்ள நீங்கள். எதிர்காலத்தில் தொழில்முனைவோராக மாறி, மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென கூறி விடைபெறுகிறேன்.
விழாவில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். TCS. Sales Force, TVS, FOXCONN.Sutherland, Tech Mahindra, Ashok Leyland, Sundaram Brake linings, Unitech, போன்ற பல முன்னனி நிறுவனங்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்களுக்கு பணி ஆணைகளையும், IIT மும்பை, நிறுவனத்தினால் Mapathons Championship போட்டியில் வெற்றி பெற்ற 3-குழுவிற்கு பரிசுத்தொகையாக தலா ரூபாய்.10 ஆயிரத்தினையும் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் TCS Ion, IIT Pravartak Technologies Foundation, Coca Cola போன்ற முன்னணி நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்திற்கும் இடையே உயர்கல்வி வழிகாட்டுதல், ஆங்கில மொழித்திறன் வளர்த்தல், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் திறன் பயிற்சி வழங்குதல் ஆகியவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. GUVI Geek Network நிறுவனத்தினால் Tamil Nadu Coders Premier League துவக்கி வைக்கப்பட்டது. மேலும், Cambridge நிறுவனத்தால் மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் கற்றலுக்கென பிரத்யேகமாக தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள். சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலர் தாரேஷ் அகமது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, CII அமைப்பின் தமிழ்நாடு தென்னிந்திய பிரிவின் தலைவர் சங்கர்வானவராயர், நான் முதல்வன் திட்ட முதன்மைச் செயல் அலுவலர் ஜெயபிரகாசன் அவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.