சென்னை: மயிலாப்பூர் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் 30 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக ரூ.25,05,000 (ஸ்கூட்டர் ஒன்றின் விலை ரூ.83,500/-) மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டன. இவற்றை மயிலாப்பூர் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். விழாவில், மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கமல் கிஷோர், சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையக இணை இயக்குநர் ஜெயஷீலா மற்றும் தென்சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.