சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கோவை மாவட்ட பாஜ தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்ட பாஜ தலைவராக உள்ள பாலாஜி உத்தம ராமசாமி, கடந்த மாதம் 8ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி, அதை சமூக வலைதளங்களில் பரப்பியதாக கோவை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பாலாஜி உத்தம ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், உதயநிதி ஸ்டாலின் குறித்து உள்நோக்கத்துடனோ, அவதூறாகவோ பேசவில்லை. முறையாக விசாரிக்காமல், அரசியல் உள்நோக்கத்தோடு தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் அளிக்க வேண்டுமென்று காவல்துறை தரப்பில் கோரப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவுக்கு விளக்கமளிக்குமாறு காவல்துறைக்கு அவகாசம் அளித்து விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.