சென்னை: தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால், டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை அண்ணாநகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட செனாய் நகர் பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ெதாடங்கி வைத்து பார்வையிட்டார்.பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முன் எப்போதும் இல்லாத அளவிற்கு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலம் தொடரும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் வாரந்தோறும் மருத்துவ முகாம் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. 1000 முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு வாரமும் கூடுதலாகவே நடத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வார முகாமை 1 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்தியுள்ளனர். வரும் டிசம்பர் மாதம் 2, 9, 16, 23, 30 என 5 வாரங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் 476 நடமாடும் மருத்துவ குழுக்கள் பங்கேற்று பணியாற்ற உள்ளனர். ஐந்தாண்டுக்கு ஒருமுறை டெங்கு பாதிப்பு அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் டெங்குவை கட்டுக்குள் கொண்டுவரக்கூடிய நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் டெங்கு தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டில் உள்ளது.
மழைக்கால நோய்கள் என்று சொல்லக்கூடிய அனைத்து காய்ச்சல்களுக்கும் இந்த முகாம்களில் மருந்துகள் தயார் நிலையில் இருக்கிறது. மருத்துவ முகாம்களை தொடர்ச்சியாக மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.அம்மா கிளினிக் திட்டம் ஒராண்டு திட்டம் என்பதால் அது முடிந்துவிட்டது. அதுகுறித்து ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தி உள்ளேன். நகர்ப்புற நல வாழ்வு மையங்களை பொறுத்தவரை ஐந்தாண்டு முடிவடைந்தாலும் கூட, ஒன்றிய அரசுடன் இணைந்து நீட்டிப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.
* சென்னையில் 161 இடங்களில் புதிய சுகாதார மையங்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,’சென்னை மாநகராட்சியின் மருத்துவத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக அண்ணா நகர் 8வது மண்டலத்தில் நகர்ப்புற சமுதாய நிலையை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தோம். 100 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாக சுமார் 13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இம் மருத்துவமனை 2 மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும். சென்னையில் 40 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் உள்ளடக்கிய 152 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள், 7 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 நகர்ப்புற சமுதாய நல நிலையங்கள் ஆகியவை இன்னும் இரண்டு மாதத்தில் திறந்து வைக்கப்பட உள்ளது. வரும் 15ம் தேதி புதுக்கோட்டையில் உள்ள பல் மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார்.