சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக போலீஸ் விசாரணை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இவர் காவல்துறைக்கு வேறு பொறுப்பு வகித்தி ருக்கிறார். சக்கரவர்த்தி வழக்கில் சம்பவம் நடந்த 3வது நாளே முக்கியக் குற்றவாளிகள் இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. பாஜ பிரமுகர் சீனிவாசன் கொலை வழக்கில் கைதான நபர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காரணத்தினாலேயே பாமக பிரமுகர் சக்கரவர்த்தி கொலை நடந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து, பாமகவைக் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் பழனிசாமி, பாமகவுக்கு தூது விடுவது போல அறிக்கை விட்டிருக்கிறார். பாமக நிர்வாகியைக் கொலை செய்தவர் பாஜக நிர்வாகியின் மகன் என்று பழனிசாமி ஏன் சொல்லவில்லை? துப்பாக்கி கலாசாரம் பற்றியெல்லாம் பழனிசாமி பேசலாமா? அதிமுக ஆட்சியில் துப்பாக்கி மலிவு விலைக்கு விற்கப்பட்டதும், அதை வாங்கி கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
2018-ல் கள்ளத் துப்பாக்கி கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த பரமேஸ்வரன் எனும் காவலரே கைதானார். 2020-ல் 8 துப்பாக்கிகள், 60 தோட்டாக்களுடன் கும்பகோணம் அருகே மருத்துவர் ராம்குமார் பிடிபட்டார். 2018 ஏப்ரலில் அடையாறு இந்திரா நகர் வங்கியில் துப்பாக்கி முனையில் 7 லட்சம் கொள்ளை. 2018-ல் கன்னியாகுமரியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு நாட்டுத் துப்பாக்கி விற்பனை. 2020 மே மாதம் திருப்பூரில் நிலம் தொடர்பான பிரச்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட நபர். 2020 ஜூலையில் ஈரோட்டிலிருந்து 9 எம்.எம்.ரகக் கள்ளத்துப்பாக்கி, 5 தோட்டாக்களுடன் திருநெல்வேலிக்கு வந்த குமுளி ராஜ்குமார். 2020 செப்டம்பரில் சென்னை பெரம்பூரில் வீடு புகுந்து துப்பாக்கியைக் காட்டி பெண்ணை மிரட்டிய நபர் இப்படிப் பழனிசாமி ஆட்சியில் நடந்த துப்பாக்கி சம்பவங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
2020 ஆகஸ்ட் மாதம் வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், “பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழகத்தில் ரவுடிகள், குண்டர்கள், அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க வேண்டும்” என்று கூறியது பழனிசாமிக்கு தெரியாதா? இதுதான் அவருடை ஆட்சியில் நிலவிய அமைதி, வளம், வளர்ச்சியா?. சக்கரவர்த்தி கொலை வழக்கில், “கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்” என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஐடி விங் பிரமுகர் பிரபாத்துக்கு டபுள் பேரல் துப்பாக்கியை யார் வாங்கி கொடுத்தது? என பழனிசாமி விளக்குவாரா? திமுக அரசு அமைந்த பிறகுதான் குற்றங்கள் தடுக்கப்பட்டு, குறைந்து கொண்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கைப் சிறப்பாகப் பாதுகாத்து வருவதால்தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 விழுக்காடாக உயர்ந்து நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது.