சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025-26ஆம் கல்வியாண்டில் திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் திரு.வி.க.நகர் மண்டலம், குக்ஸ் சாலை சென்னை தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்.
இன்று (02.06.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைக்கும் நிகழ்வாக, திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் திரு.வி.க.நகர் மண்டலம், குக்ஸ் சாலை சென்னை தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், அண்ணாநகர் மண்டலம், வார்டு-99க்குட்பட்ட சுந்தரம்பிள்ளை நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து சென்னைப் பள்ளிகளின் வாயிலாக பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு தரமான கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் விதமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 417 சென்னை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3,739 ஆசிரியர்கள் மற்றும் 140 நிரந்தர ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
2024-2025ஆம் கல்வியாண்டில் 1,12,788 மாணவ/மாணவியர்கள் கல்வி பயின்றனர். மேலும், 272 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள மழலையர் பிரிவுகளில் சுமார் 12,621 மாணவ / மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். தற்போது 2025-26ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை புதியதாக 16,491 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை மேம்படுத்த, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மகிழ்ச்சியான வகுப்பறைகள் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் 100 சதவீத வருகைப் பதிவினை ஊக்குவிக்கும் விதமாக, வருடந்தோறும் ரூ.1000/- ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களின் சேர்க்கை மற்றும் வருகையினை அதிகரிக்க 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாதுகாப்பு கருதி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியரையும் உற்சாகப்படுத்தும் விதமாக, அறிவியல் மற்றும் வரலாற்று தொடர்புடைய இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியரின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், அவர்களை விளையாட்டில் திறம்பட பங்குபெற வைப்பதற்காகவும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.