சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வரும் நவம்பர் 6 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிரான இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிக்கை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவானது நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
மருத்துவ காரணத்தை கூறி செந்தில்பாலாஜி பிணை கோருவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. செந்தில்பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ளதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதால் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பிணை மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அவருடைய நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தற்போது 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.