புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. போக்குவரத்து துறையில் பணியமர்த்த பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் வழக்கில் இருந்து ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த 19ம் தேதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுவை நவம்பர் 20ம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.