சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை 11.20 மணியளவில் ஜெட்டா நகருக்கு முதல் தனி சிறப்பு விமானம் புறப்படுகிறது. இதில் 254 ஹஜ் யாத்ரிகர்கள் பயணம் செய்கின்றனர். இதைத் தொடர்ந்து, 2வது சிறப்பு விமானம் மதியம் 12.10 மணியளவில் கிளம்பியது. இதில் 150 ஹஜ் யாத்ரிகர்கள் செல்கின்றனர். இவர்கள் ஹஜ் யாத்திரை முடிந்து, வரும் ஜூலை முதல் வாரத்தில் இதேபோல் தனி சிறப்பு விமானங்களில் சென்னை திரும்புகின்றனர். இதைத் தொடர்ந்து, காலை 7.30 மணியளவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் வந்து, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து கூறி, வழியனுப்பி வைத்தார்.
பின்னர் அமைச்சர் மஸ்தான்அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 கோடி மானியமாக அறிவித்துள்ளார். எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. எதிர்க்கட்சி தலைவருக்கு வேறு செய்தி இல்லை என்பதால், இதுபோல் என்னை பற்றி பல்வேறு அவதூறுகள் பரப்பி வருகிறார். நான் இறைபக்தியுடன் வாழ்ந்து வருபவன். ஒரே தொகுதியில் நான் பலமுறை வெற்றி பெற்றிருக்கிறேன். நான் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தால், என்னை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். குற்றம் செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தவறுகள் யார் செய்தாலும், அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், அவர்கள் இதுபோன்ற நடவடிக்கை எடுக்காததால்தான், தற்போது இத்தவறுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.