சென்னை: மதுரை உலகத் தமிழ் சங்கம் 8 ஆண்டுகளுக்கு பிறகு சங்க விதிகளின்படி புதுப்பிப்பிக்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: மதுரை, உலகத் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975ன்படி, மதுரை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த பின்னர், செப்டம்பர் மாதத்திற்குள் ஓராண்டிற்கான வரவு செலவு அறிக்கையை தணிக்கை செய்து, பொதுக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பின்னர் மாவட்ட பதிவாளரிடம் தாக்கல் செய்து, சங்கத்தின் பதிவை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாகப் பொதுக் குழு நடத்தாததால், சங்கம் புதுப்பிக்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசு அலுவலங்கள் மற்றும் அரசு சார் நிறுவனங்கள் ஆகியவற்றின் நிர்வாகம் சிறப்பாகவும் தொய்வின்றியும் நடத்த முதல்வர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சராக சாமிநாதன் பொறுப்பேற்ற பின்னர், 2023 மே மாதம் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், உலகத் தமிழ்ச் சங்கம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதை அறிந்து, உலகத் தமிழ்ச் சங்கத்தை ஆய்வு செய்யும் வகையில் செப்டம்பர் மாதம் நேரடியாக மதுரைக்கு வந்து உலகத் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் சங்கப் பதிவை புதுப்பித்தல் தொடர்பாகவும் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான “இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை” 2023 டிசம்பர் மாதம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்தபோது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் வந்து, சங்கப் புதுப்பித்தல் தொடர்பான பணிகளின் நிலையை கேட்டறிந்து, விரைந்து சங்க புதுப்பித்தல் பணியை நிறைவேற்ற வலியுறுத்தினார். அவரது தொடர் அறிவுறுத்தலின் பேரில், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொறுப்பு), ஔவை அருள் முயற்சியால் 8 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த உலகத் தமிழ்ச் சங்கம், கடந்த ஜூலை 10ம் தேதி புதுப்பிக்கப்பட்டது. சங்கப் பதிவுச் சட்டத்தின்படி, 10 ஆண்டுகள் சங்கம் புதுப்பிக்கப்படவில்லை எனில், சங்க பதிவிலிருந்து சங்கம் நிரந்தரமாக நீக்கம் செய்யப்படும். இதன் அடிப்படையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் பதிவும் நீக்கப்படும் நிலையில் இருந்தது. புதுப்பித்தலின் மூலம் உலகதமிழ்ச் சங்கம் தொடர்ந்து இயங்கும் வகையில் தக்கவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.