கோவை: ஒன்றிய அரசின் ஊழலை மறைக்க உதயநிதி மீது பாய்கிறார்கள் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறினார். மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி மதுரையில் வருகிற 15ம் தேதி மதிமுக மாநாடு நடக்கிறது. இதுதொடர்பாக கோவை மாவட்ட மதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துரை வைகோ சிறப்புரையாற்றினார். இதன்பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சனாதனம் ஒழிப்பு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சரியான கருத்து. அவர் இந்து மதத்திற்கு எதிராக பேசவில்லை.
இந்து மதத்தின் பெயரை வைத்துக்கொண்டு சிலர் ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் மக்களிடம் பிரிவினையை உண்டாக்குகிறார்கள். இதை கண்டித்துதான் அவர் பேசினார். அவரது பேச்சு வடமாநிலங்களில் சனாதன அமைப்புகளால், அந்த அமைப்பின் தலைவர்களால் திரித்து வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள திராவிட அமைப்புகள், இந்து மதத்திற்கு எதிரான அமைப்புகள் இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டுள்ளனர். ஆனால், சனாதன அமைப்புகள் ஒன்றிய அரசின் தவறை, ஊழலை மறைக்க உதயநிதி மீது பாய்கிறார்கள். உ.பி.யை சேர்ந்த ஒரு சாமியார், உதயநிதி ஸ்டாலின் தலையை சீவுவேன் என்கிறார்.
இது, தலிபான் அமைப்பின் தீவிரவாத செயல் போன்று உள்ளது. தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இங்கு பிரிவினையை உண்டாக்க முடியாது. தற்போது ‘பாரதம்’ என்ற புதிய யுக்தியை கையில் எடுக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ‘இந்தியா’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் இந்தியா என்றே அழைப்போம். இவ்வாறு துரை வைகோ கூறினார்.