பழநி: பழநியில் வரும் 24, 25ம் தேதிகளில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு பணிகளை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரும் 24, 25ம் தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டில் ஆய்வரங்கங்கள், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், புகைப்பட கண்காட்சி, வேல் அரங்கம், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம், கருத்தரங்கம், கலை மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து முருக பக்தர்கள், ஆன்மிக சான்றோர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். 8 ஆயிரம் பக்தர்கள் அமரும் வகையில் கலையரங்கரம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இப்பணிகளை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அமைச்சர் சேகர்பாபு ‘‘மாநாட்டில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, தடையில்லா செல்போன் சிக்னல் வசதி செய்து தர வேண்டும். போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்’’ என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது கலெக்டர் பூங்கொடி, எஸ்பி பிரதீப், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் மற்றும் ஆதீனங்கள் உடனிருந்தனர்.